பகீர்... காதலியின் கையைத் துண்டித்த காதலன்: வேறு ஒருவருடன் நிச்சயமானதால் வெறிச்செயல்!


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண்

வேறு ஒருவருடன் நிச்சயம் செய்யப்பட்டதால் ஆத்திரத்தில் காதலியின் கையைத் துண்டித்த காதலன் கைது செய்யப்பட்ட சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உன்னாவ்

உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரிங்கு. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண்ணைக் காதலித்து வந்தார். அவர்கள் இருவரும் நெருங்கிப் பழகி வந்தனர். இதையறிந்த பெண்ணின் குடும்பத்தினர், வேறு ஒருவருடன் தங்கள் பெண்ணுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

இதுகுறித்து பெண்ணிடம் பேசியபோது, அதற்கு அவரும் ஒப்புக் கொண்டார். இதையடுத்து வேறு ஒருவருடன் அந்த பெண்ணுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட இளம்பெண்

இதையறிந்த ரிங்கு கோபமடைந்தார். தான் காதலித்த பெண்ணுக்கு, வேறு ஒருவருடன் நிச்சயம் செய்யப்பட்டதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதனால், தனது காதலியைப் பழிவாங்க வேண்டும் என்று நினைத்தார். தன் காதலியை தனியாக சந்திக்க வேண்டும் என்று நேற்று அழைத்துள்ளார். இதனை ஏற்று அந்த பெண்ணும் காதலனை சந்திக்கச் சென்றார். அப்போது அங்கு ரிங்குவிற்கும், அவரது காதலிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ரிங்கு மறைத்து வைத்திருந்த வாளால் இளம்பெண்ணின் கையை வெட்டினார். இதனால் அவரது இடது கை துண்டானது.

இதையடுத்து அங்கிருந்து ரிங்கு தப்பியோடி விட்டார். அவரால் பாதிக்கப்பட்ட பெண், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவ அதிகாரி அரவிந்த் குமார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் நடந்த சில மணி நேரத்திலேயே ரிங்குவை போலீஸார் கைது செய்தனர். அவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் உன்னாவ் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x