"வங்கி பண பரிவர்த்தனை மோசடி வழக்கில் கைதானவருக்கு சீன சைபர் மோசடி கும்பலுடன் தொடர்பு"


சென்னை: வங்கி பண பரிவர்த்தனை மோசடி வழக்கில் கைதான திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டை சேர்ந்த தமிழரசனுக்கு சீனாவைச் சேர்ந்த சைபர் மோசடி கும்பலுடன் தொடர்பு இருக்கும் அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மும்பையில் இருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் பேசுகிறோம் என மிரட்டி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வரும் தொழில் அதிபரிடம்ரூ.2.16 கோடி பணம் பறிக்கப்பட்டது. இதுகுறித்து அவர், ஜெய்ப்பூர் ‘சைபர் கிரைம்‘ போலீஸில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து அமலாக்கத் துறையின் சைபர் கிரைம் பிரிவின் உதவியை ஜெய்ப்பூர் சைபர் கிரைம் போலீஸார் நாடினர். இதைத் தொடர்ந்து அவர் பணம் அனுப்பிய வங்கி கணக்கில் இருந்து பணத்தை மீட்கும் நடவடிக்கையிலும், மோசடி கும்பலை கைது செய்வதற்கான நடவடிக்கையிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் இறங்கினர்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக பெங்களூருவை சேர்ந்த சசிகுமார், சச்சின், கிரண், சரண்ராஜ் ஆகிய 4 பேர் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டனர். ஜெய்ப்பூர் தொழிலதிபரிடம் அபகரித்த பணத்தை வங்கி ஊழியர்களின் உதவியோடு திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டை சேர்ந்த தமிழரசன், அஜித், பிரகாஷ், அரவிந்தன் ஆகிய 4 பேர் போலி நிறுவனங்களின் பெயரில் வங்கி கணக்கை தொடங்கி பணத்தை பரிமாற்றம் செய்திருப்பது அமலாக்கத் துறை விசாரணையில் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அவர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் பெங்களூரு அழைத்து செல்லப்பட்டு அமலாக்கத் துறை சிறப்புநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டனர். அவர்களை 4 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு கோர்ட் அனுமதி வழங்கியது.

இதையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கைதான தமிழரசன் சீனாவை சேர்ந்த ‘சைபர்’மோசடி கும்பலுடன் தொடர்பில் இருந்த தகவல் கிடைத்துள்ளதாகவும், இதே முறையில் ரூ.28 கோடி வரை மோசடி நடந்துள்ளதாகவும் அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

x