மண்ணிவாக்கத்தில் கஞ்சா விற்ற ரவுடி கைது


வண்டலூர்: வண்டலூர், மணிமங்கலம், ஒட்டேரி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு கொலை - கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி சிலம்பு என்கிற சிலம்பரசன் (30) தலைமறைவாக இருந்து வந்தார்.

மணிமங்கலம் பகுதியில் அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து ஓட்டேரி உதவி ஆய்வாளர் வெற்றி செல்வன் தலைமையில் போலீஸார் அப்பகுதிக்குச் சென்றுள்ளனர். ஆதனூர் பிரதான சாலை மண்ணிவாக்கம் அருகே சென்றபோது போலீஸாரை கண்ட சிலம்பரசன் மற்றும் அவரது கூட்டாளி மணி (எ) பிகில் மணி (32) தப்பினர். இதில் சிலம்பரசன் தப்பிக்க முயன்ற போது கால் இடறி கீழே விழுந்து கை கால் முடிவு ஏற்பட்டது.

அவரை மீட்ட போலீஸார் தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவருக்கு மாவு கட்டு போடப்பட்டுள்ளது. சிலம்பரசனிடம் இருந்து ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ 150 கிராம் கஞ்சா, இருசக்கர வாகனம், ஒரு கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்த ஓட்டேரி காவல் துறையினர் சிலம்பரசனை சிறையில் அடைத்தனர்.

இவர் மீது 22 வழக்குகள் 10 காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. மேலும் ஓட்டேரி காவல் நிலையத்தில் மட்டும் 12 வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தலைமறைவான மணியை போலீஸார் தேடி வருகின்றனர்.

x