பாளையங்கோட்டை கல்லூரி மாணவியை மது அருந்த அழைத்ததாக பேராசிரியர் கைது


திருநெல்வேலி: நெல்லை பாளையங்கோட்டையில் மாணவியிடம் ஆபாசமாக பேசி, மது அருந்த வருமாறு அழைத்த பேராசிரியர் கைது செய்யப்பட்டார். தலைமறைவான மற்றொரு பேராசிரியரை போலீஸார் தேடி வருகின்றனர்.

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 4,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அரசு உதவிபெறும் இக்கல்லூரியின் சமூகப்பணித் துறையில் மாலை நேர சுயநிதி வகுப்பில் திருச்செந்தூரைச் சேர்ந்த ஜெபஸ்டின்(40), தூத்துக்குடி பால்ராஜ் (40) ஆகியோர் பேராசிரியர்களாக பணிபுரிந்து வந்தனர்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் கடந்த 4-ம் தேதி இரவு நெல்லையில் உள்ள ஒரு விடுதியில் மது அருந்தியுள்ளனர். அப்போது, தங்களது வகுப்பு மாணவி ஒருவரை செல்போனில் தொடர்பு கொண்டுப் பேசியுள்ளனர். இருவரும் அவரிடம் ஆபாசமாகப் பேசியதுடன், “நாங்கள் 2 பேரும் மது அருந்திக் கொண்டிருக்கிறோம், நீயும் மது அருந்த வா” என்று அழைத்தார்களாம்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவரது பெற்றோர் பாளையங்கோட்டை போலீஸில் கடந்த 5-ம் தேதி புகார் அளித்தனர்.

எனினும், புகார் தொடர்பாக போலீஸார் விசாரணை தொடங்குவதற்குள், தங்கள் மகளின் படிப்பு பாதிக்கப்படும் என்று அஞ்சி, மேல்நடவடிக்கை எதுவும் வேண்டாம் என்று மாணவியின் பெற்றோர் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அந்த புகார் மனுவை போலீஸார் கிடப்பில் போட்டுவிட்டனர்.

இதையறிந்த இந்து முன்னணி உள்ளிட்ட சில அமைப்பினர், சம்பந்தப்பட்ட பேராசிரியர்களை கைது செய்யாவிட்டால், நீதிமன்றத்தை நாடப் போவதாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு தெரியவரவே, உளவுத் துறை மூலம் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்குமாறு உயரதிகாரிகள் உத்தரவிட்டனர்.

அதன்பேரில், நெல்லை மாநகர காவல் ஆணையர் ரூபேஸ் குமார் மீனா, இந்த விவகாரத்தில் சிறப்பு கவனம் செலுத்தி விசாரணை நடத்தினார். விசாரணையில், பேராசிரியர்கள் ஜெபஸ்டின், பால்ராஜ் ஆகியோர் மாணவியிடம் செல்போனில் ஆபாசமாக பேசியது உறுதியானது. இதையடுத்து, நேற்று முன்தினம் நள்ளிரவில் தூத்துக்குடிக்கு சென்ற தனிப்படை போலீஸார் ஜெபஸ்டினைக் கைது செய்தனர்.

மேலும், தலைமறைவாகியுள்ள பால்ராஜை போலீஸார் தேடி வருகின்றனர். பெண்ணிடம் ஆபாசமாகப் பேசியதாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, பேராசிரியர்கள் ஜெபஸ்டின், பால்ராஜ் ஆகியோரை பணிநீக்கம் செய்து தூய சவேரியார் கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

x