மற்றுமொரு ‘நீட்’ தற்கொலை... தொடரும் ‘கோட்டா’ துயரங்களில் இந்த வருடத்தில் இது 28-வது உயிர்ப்பலி


நீட் தற்கொலை

நீட் நுழைவுத் தேர்வுக்காக தயாராகி வந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த மாணவி ஒருவர், பயிற்சி மையம் அமைந்திருக்கும் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டில் அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. அரியலூர் அனிதா மரணத்தை அடுத்து அதிகரிக்கும் நீட் தற்கொலைகளுக்கு முடிவுகட்ட பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் இந்த முயற்சிகள், இந்தியாவின் இதர பகுதிகளில் விசித்திரமாக பார்க்கப்படுகின்றன. தேசம் தழுவிய நீட் நுழைவுத் தேர்வால் தமிழகம் மட்டுமே பாதிக்கப்படுகிறதா என்ற கேள்வியும் எழுந்தது.

தற்கொலை

நிதர்சனத்தில் தமிழகத்துக்கு அப்பால், இந்தியா முழுக்கவுமே நீட் தற்கொலைகள் அரங்கேறி வருகின்றன. அதற்கான உதாரணமாக ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா மாவட்டம் விளங்குகிறது. இங்கு நீட் மற்றும் ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. அதற்காக இங்கே தங்கிப் பயிலும் மாணவ - மாணவியர் மத்தியில் தற்கொலைகளும் அதிகரித்து வருகின்றன.

நேற்றைய மேற்கு வங்க மாணவி தற்கொலையை அடுத்து, கோட்டா மாணவ - மாணவியர் தற்கொலை இந்த ஓராண்டில் மட்டும் இதுவரை 28-க்கு உயர்ந்திருப்பதை போலீஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.

நேற்று பின்னிரவில் மின்விசிறியில் தூக்கிட்டு இறந்த நிலையில் மேற்கு வங்க மாணவியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. மதியம் தனது அறைக்குள் சென்ற மாணவி இரவு உணவுக்கும் வெளியே வராததில், தங்குமிடத்தின் உரிமையாளர் போலீஸாருக்கு தகவல் தந்தார். பின்னர் போலீஸார் கதவை உடைத்து, மாணவியின் சடலத்தை கைப்பற்றினர்.

நீட் தற்கொலை - சித்தரிப்பு

கோட்டாவில் நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வு தயாரிப்புகளுக்கான பயிற்சி மையங்களின் வருடாந்திர வணிகம் ரூ10,000 கோடியாக மதிப்பிடப்படுகிறது. நாடு நெடுகிலும் இருந்து, இங்கு தங்கிப் படிக்கும் மாணவர்கள் மத்தியில் பாடச்சுமை மற்றும் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொள்வதும் அதிகரித்து வருகிறது. கோட்டாவில் இதுபோன்ற துயரங்களை தடுத்து நிறுத்தும் நோக்கில் பல்வேறு வழிகாட்டுதல்களை ராஜஸ்தான் அரசு செப்.28 அன்று அறிவித்தது.

கோட்டாவில் கண்காணிப்பு மையங்களை உருவாக்கவும், பயிற்சி நிறுவனங்களில் படிக்கும் அனைவருக்குமான ஒருங்கிணைந்த இணையதளம் ஒன்றை உருவாக்குவதையும் இந்த வழிகாட்டுதல்கள் கட்டாயமாக்கியுள்ளன. பயிற்சி நிறுவனங்களின் ஆசிரியர்கள் ஏதேனும் விதிமுறைகளை மீறினால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...


HBD YamiGautam | சர்ச்சைகளை சாதனைகளாக்கிய பஞ்சாபி பொண்ணு!

கனமழை... புயல்... 1.5 லட்சம் வீடுகளின் மின் இணைப்பு துண்டிப்பு!

x