அம்பத்தூர் அருகே ஆள்மாறாட்டம் செய்து ரூ.1 கோடி மதிப்பிலான நிலம் அபகரிப்பு: பெண் கைது


ஆவடி: அம்பத்தூர் அருகே போலி ஆவணங்கள் தயாரித்தும், ஆள்மாறாட்டம் செய்தும் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அபகரிப்பு செய்யப்பட்டது தொடர்பாக பெண் ஒருவரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் இன்று கைது செய்தனர்.

சென்னை, கோடம்பாக்கம், ரங்கராஜபுரம் பிரதான சாலையைச் சேர்ந்தவர் ஷீலா (60). இவர், கடந்த 1999 -ம் ஆண்டு தனது சகோதரர் பிலிப் ஜோசப் என்பவருடன் சேர்ந்து அம்பத்தூர் அருகே பட்டரைவாக்கம் பகுதியில் 5,580 சதுரடி நிலத்தை வாங்கினார். 2-ஆக பிரிக்கப்பட்ட அந்த நிலத்தில், 2,790 சதுரடி நிலத்தை ஷீலா தன் அனுபவத்தில் வைத்திருந்தார்.

இந்நிலையில், கடந்த 2022 -ம் ஆண்டு பிலிப் ஜோசப் தன் நிலத்தை நில தரகர் ஒருவர் மூலம் கோவிந்தராஜ் என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். ஆனால் பிலிப் ஜோசப் நிலத்தின் அருகிலுள்ள சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஷீலாவின் நிலத்தையும் நில தரகர், போலி ஆவணங்கள் தயாரித்தும், லீலாவதி என்பவரை கொண்டு ஆள் மாறாட்டம் செய்து விற்பனை செய்துள்ளது, கொன்னூர் சார் பதிவாளர் அலுவலகம் அளித்துள்ள வில்லங்கச் சான்றில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஷீலா அளித்த புகாரின் அடிப்படையில், ஆவடி மத்திய குற்றப்பிரிவின் நிலப் பிரச்சினை தீர்வு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் அடிப்படையில், நிலம் அபகரிப்பு வழக்கில், ஆள் மாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக சென்னை, கொடுங்கையூர், காந்தி நகர், 4-வது தெருவைச் சேர்ந்த லீலாவதி (54) என்பவரை இன்று போலீஸார் கைது செய்தனர்.

x