திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் திமுக கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி... வார்டு புறக்கணிக்கப்படுவதாக புகார்!


திருச்சி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் திமுக கவுன்சிலர் காஜாமலை விஜய் தீக்குளிக்க முயற்சி

திருச்சி மாநகராட்சியில் தனது வார்டு புறக்கணிக்கப்படுவதாக கூறி ராஜினாமா கடிதம் அளித்திருந்த திமுக கவுன்சிலர் ஒருவர், திடீரென மாமன்ற அலுவலகத்தில் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாநகராட்சியில் மொத்தம் உள்ள 65 வார்டுகளில் திமுக கூட்டணிக்கு 56 இடங்கள் உள்ளன. தற்போது மாநகராட்சியின் மேயராக திமுகவைச் சேர்ந்த அன்பழகன் பதவி வகித்து வருகிறார். துணை மேயராக திவ்யாவும், மாநகராட்சி ஆணையாளராக சரவணனும் பதவி வகித்து வருகின்றனர். இந்த மாநகராட்சியில் 60-வது வார்டு உறுப்பினராக திமுகவைச் சேர்ந்த காஜாமலை விஜய் என்பவர் பதவி வகித்து வருகிறார்.

தனது வார்டை புறக்கணிப்பதாக விஜய் குற்றச்சாட்டு

கடந்த சில மாதங்களாக தனது தொகுதியை மாநகராட்சி நிர்வாகம் புறக்கணித்து வருவதாக அவர் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். இந்நிலையில் இன்று மாநகராட்சி அலுவலகத்திற்கு வருகை தந்த விஜய், தனது ராஜினாமா கடிதத்தை ஆணையாளர் சரவணனிடம் வழங்கினார். மேலும் அதன் நகல் ஒன்றை மேயர் அன்பழகனிடம் வழங்கினார். இதையடுத்து அங்கிருந்த பிற திமுக கவுன்சிலர்கள் அவரை சமாதானப்படுத்த முயன்றனர்.

அப்போது தனது வார்டை தொடர்ந்து புறக்கணித்து வருவதால் 25 ஆண்டுகளாக கவுன்சிலராக பணியாற்றி வரும் தன்னால் வார்டு பகுதிகளுக்கு செல்ல முடியவில்லை என குற்றம் சாட்டினார். மேலும், வார்டு பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாமல் இருப்பதால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறிவிட்டு, அங்கிருந்து கிளம்பிச் சென்றுள்ளார்.

விஜயை படமெடுத்த செய்தியாளர்களை அவரது ஓட்டுநர் தாக்கியதாக புகார்

சிறிது நேரத்தில் மீண்டும் மாநகராட்சி அலுவலகத்திற்கு திரும்பிய காஜாமலை விஜய், தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்து மண்ணெண்ணையை உடல் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்த திமுக கவுன்சிலர்கள் மற்றும் போலீஸார் அவரை தடுத்து நிறுத்தி, அவரிடம் இருந்து மண்ணெண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்தனர்.

இதனிடையே இந்த சம்பவத்தை செய்தியாளர்கள் படம் எடுத்துக் கொண்டிருந்த போது விஜயின் ஓட்டுநர், செய்தியாளர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கு இடையேயும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவங்களால் திருச்சி மாநகராட்சி வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

x