ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் பரபரப்பு... பெல்லாரியில் இன்று சிக்கியது குற்றவாளியா?


பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் நபரை என்ஐஏ கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிசிடிவி கேமராக்களில் பதிவான சந்தேக நபர்

பெங்களூரு ப்ரூக்ஃபீல்ட் பகுதியில் உள்ள பிரபல ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் கடந்த 1-ம் தேதி அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறின. இதில் 10 பேர் படுகாயமடைந்தனர்.

இது தொடர்பாக பெங்களூரு மாநகர குற்றப்பிரிவு, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) ஆகிய அமைப்புகள் விசாரணை நடத்தி வந்தன. சம்பவ இடம் மற்றும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளில் தொப்பி அணிந்திருந்த ஒரு நபர் உணவகத்திற்குள் நுழைந்து வெடிபொருட்களை கொண்ட பையை வைத்துச் சென்றது தெரியவந்தது.

சிசிடிவி கேமராவில் கண்டறியப்பட்ட சந்தேக நபர் குறித்து தகவல்கள் தெரிவிப்போருக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என, என்ஐஏ தெரிவித்திருந்தது.

என்ஐஏ விசாரணை

இதற்கிடையே, குண்டு வெடிப்புக்கு காரணமானவர் என சந்தேகிக்கப்படும் நபர், தொப்பி மற்றும் முகமூடி இல்லாமல் பேருந்தில் பயணம் செய்த காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்நிலையில், ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேக நபரை என்ஐஏ இன்று கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெல்லாரியில் உள்ள கவுல் பஜார் பகுதியைச் சேர்ந்த அந்த நபரின் பெயர் ஷபீர் என தெரியவந்துள்ளது. சிசிடிவி காட்சிகள், சந்தேக நபரின் பயண விவரங்கள் அடிப்படையில் இவரை என்ஐஏ சுற்றிவளைத்துள்ளது. இருப்பினும், இவர்தான் தாங்கள் தேடிவந்த நபரா என்பதை உறுதி செய்வதற்காக ஷபீரிடம் என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x