திருவாரூர் அரசு மருத்துவமனையில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேல் ஏற்பட்ட மின்வெட்டால், வென்டிலேட்டர் பழுது ஏற்பட்டு பெண் உயிரிழந்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா பகுதியைச் சேர்ந்த அமராவதி(50) என்ற பெண் நுரையீரல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இவர் இரண்டு நாட்களாக அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
நுரையீரல் பிரச்சினை என்பதாலும் மூச்சுத் திணறல் ஏற்படும் என்பதாலும் இவருக்கு வென்டிலேட்டர் மூலமாக சுவாசம் செலுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று மதியம் திடீரென அரை மணி நேரத்திற்கும் மேலாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் மின்சாரம் தடைபட்டது. இதனால் அமராவதிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு வென்டிலேட்டர் இயங்காமல் அவர் மரணம் அடைந்து விட்டார் என அவருடைய உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இது தொடர்பாக மருத்துவர்களிடம் கேட்ட போது, மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்குமாறு அலட்சியமாக பதிலளித்ததாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “திமுக ஆட்சியில், ஏழை, எளிய மக்கள் சிகிச்சை பெறும் அரசு மருத்துவமனைகள், எத்தனை துச்சமாக நடத்தப்படுகின்றன என்பதை இந்தத் துயரச் சம்பவம் மீண்டும் உணர்த்தியிருக்கிறது.
அரசு மருத்துவமனைகள் இத்தகைய அவல நிலையில் இருக்கும்போது, தமிழக மருத்துவக் கட்டமைப்பை ஐரோப்பிய நாடுகளுடன் தான் ஒப்பிட வேண்டும் என்று வெட்கமே இல்லாமல் கூறிக்கொள்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.” என காட்டத்துடன் குறிப்பிட்டுள்ளார்.