வியாபாரியிடம் 1 கிலோ தங்கக் கட்டி மோசடி: கோவை அருகே சிறுவன் உட்பட 4 பேர் கைது


கோவை: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் ஹரிசங்கர். இவர், அதே பகுதியில் சொந்தமாக நகை வியாபாரம் செய்து வருகிறார். சமீபத்தில் இவரை செல்போனில் தொடர்பு கொண்ட நபர், ‘தனது பெயர் சந்திரசேகர் என்றும், கோவையைச் சேர்ந்தவர் என்றும், தனக்கு ஒரு கிலோ தங்கக்கட்டிகள் தேவைப்படுகின்றன’ என்றும் தெரிவித்தார்.

கோவைக்கு வந்து தங்கக்கட்டிகளை கொடுத்துவிட்டு, பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் எனவும் அந்நபர் கூறியுள்ளார். இதை நம்பிய ஹரிசங்கர், கோவை பாப்பம்பட்டிக்கு நேற்று முன்தினம் தங்கக்கட்டிகளை எடுத்து வந்தார். சந்திரசேகரனை ஹரிசங்கர் தொடர்பு கொண்டபோது, தனது மேனேஜர் ராஜ்குமார் என்பவர் வந்து பணத்தை கொடுத்துவிட்டு தங்கக்கட்டியை பெற்றுச் செல்வார் என அவர் கூறியுள்ளார்.

அதன்படி, ராஜ்குமார் என்பவர் அங்கு வந்து ஹரிசங்கரிடம் தங்கக்கட்டிகளை வாங்கிக் கொண்டார். ‘தனது வாகனம் பழுதாகிவிட்டதாகவும், நீங்கள் முன்னால் சென்று லட்சுமி மில் சந்திப்பில் காத்திருங்கள், நான் பணத்துடன் வந்துவிடுகிறேன்’ என ஹரிசங்கரிடம் கூறிவிட்டு அந்நபர் சென்றுவிட்டார். இதை நம்பிய ஹரிசங்கர் லட்சுமி மில் சந்திப்பில் பல மணி நேரம் காத்திருந்தும் அந்நபர் வரவில்லை. அதன் பின்னரே தான் ஏமாற்றப்பட்டது அவருக்கு தெரியவந்தது.

புகாரின்பேரில் சூலூர் போலீஸார் விசாரணை நடத்தி, ஈரோட்டைச் சேர்ந்த பாபு (53), நவீன்குமார் (25), பிரபு (25) மற்றும் 17 வயது சிறுவன் என 4 பேரை கைது செய்தனர். இதில், சந்திரசேகராக பாபுவும், ராஜ்குமாராக நவீன்குமாரும் நடித்து தெரியவந்தது. இவர்களிடம் இருந்து ஒரு கிலோ தங்கக்கட்டியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

x