ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து என்கவுன்டர்கள்: 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை; 2 ராணுவ வீரர்கள் வீரமரணம்


ஜம்மு காஷ்மீர்: பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து நடந்த 3 என்கவுண்டர்களில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் இன்று காலை பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கைக்குப் பிறகு வெள்ளிக்கிழமை மாலை வடக்கு காஷ்மீர் மாவட்டத்தின் பட்டான் பகுதியில் உள்ள சக் டேபர் க்ரீரியில் துப்பாக்கிச் சண்டை தொடங்கியது.

அதேபோல மற்றொரு என்கவுன்டரில், இராணுவத்தின் ரைசிங் ஸ்டார் கார்ப்ஸ் பிரிவின் துருப்புக்கள் கதுவாவில் இரண்டு பயங்கரவாதிகளை நேற்று சுட்டுக் கொன்றனர். மேலும், தீவிரவாதிகளிடம் இருந்து அதிக எண்ணிக்கையிலான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

மேலும், ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் பயங்கரவாதிகளுடனான என்கவுன்டரில் நேற்று ஒரு ஜூனியர் கமிஷன்ட் ஆபீசர் (ஜேசிஓ) உட்பட இரண்டு இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். கிஷ்த்வாரை தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்துடன் இணைக்கும் சத்ரூ பெல்ட்டில் உள்ள நைட்காம் பகுதியில் ராணுவம் மற்றும் காவல்துறையின் கூட்டு பாதுகாப்புக் குழு நேற்று தேடுதல் நடவடிக்கையை தொடங்கியபோது துப்பாக்கிச் சண்டை வெடித்தது.

இந்த துப்பாக்கிச் சண்டையில் நான்கு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர், அவர்களில் ஜேசிஓ நைப் சுபேதார் விபன் குமார் மற்றும் சிப்பாய் அரவிந்த் சிங் ஆகியோர் உயிரிழந்தனர்.

ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பேரணி இன்று நடைபெறுகிறது. தேர்தல் பேரணியை அமைதியாகவும் சுமுகமாகவும் நடத்துவதை உறுதி செய்வதற்காக தோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடந்த 42 ஆண்டுகளில் தோடாவுக்கு பிரதமர் ஒருவர் செல்வது இதுவே முதல்முறையாகும்.

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 8ஆம் தேதி நடைபெறுகிறது.

x