ஒடிசாவில் ரூர்கேலா-பூரி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மர்மநபர்கள் நேற்று நள்ளிரவு சரமாரியாக கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ஜன்னல் கண்ணாடி உடைந்ததால் பயணிகள் பதற்றமடைந்தனர்.
ஒடிசாவில் பூரி-ரூர்கேலா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இந்த ஆண்டு செப்டம்பர் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில் தேன்கனல்- அங்குல் ரயில்வே பிரிவில் மேரமண்டலி அருகே நேற்று நள்ளிரவு வந்து கொண்டிருந்தது. அப்போது மர்மநபர்கள் அந்த ரயில் மீது சரமாரியாக கல்வீசி தாக்கினர். இதனால் ரயிலின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. இதனால் ரயில் பயணிகள் அச்சமடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து ரயில்வே போலீஸார் கூறுகையில், " குற்றவாளிகளைப் பிடிக்க கிழக்கு கடற்கரை ரயில்வேயின் பாதுகாப்பு பிரிவு, உள்ளூர் காவல் துறையுடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபடுகிறது.விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் " என்றனர்.
இந்தியா முழுவதும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள் தொடர்வதால் அதில் பயணம் செய்யும் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.