கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட அடையாளங்களுடன் பைக்குள் இருந்து இளம்பெண்ணின் உடலை போலீஸார் மீட்டுள்ள சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு டெல்லியின் ஷாஹ்தாரா மாவட்டத்தில் உள்ள விஸ்வாஸ் நகர் பகுதியில் ஒரு வீட்டில் சந்தேகத்திற்கிடமான பை இருப்பதாக ஃபார்ஷ் காவல் நிலையத்திற்கு நேற்று மாலை தகவல் வந்தது. இதையடுத்து அந்த வீட்டிற்கு காவல் துறையினர் சென்று கபார்த்த போது ஒரு பெரிய பை இருந்தது. அதைத் திறந்து பார்த்த போது இளம்பெண்ணின் உடல் அதில் இருந்ததால் போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் நியூ சஞ்சய் அமர் காலனியைச் சேர்ந்த ஷாமா(23)என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த இடத்தில் தடவியல் குழுவினர் சோதனை செய்தனர். பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொலை செய்து பையில் அவரது உடலை வைத்தவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.