ஷாக்... பர்தா அணியாமல் சென்ற மனைவி: பிரியாணி கரண்டியால் அடித்துக் கொன்ற கணவன்!


கொலை செய்யப்பட்ட சையத் அலி பாத்திமா

புது வீட்டிற்கு குடியேறிய போது பர்தா அணியாமல் இருந்த மனைவியை பிரியாணி கரண்டியால் அடித்து கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அயனாவரம் வசந்தா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் என்ற உமர்(38). இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கீழ் கட்டளை பகுதியைச் சேர்ந்த சையத் அலி பாத்திமா(36) என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும் கீழ் கட்டளை பகுதியில் உள்ள பிரியாணி கடையில் பிரியாணி மாஸ்டராக வேலை பார்த்து வந்த உமர் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார்.

இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இருவரும் கீழ் கட்டளையில் உள்ள வீட்டைக் காலி செய்துள்ளனர். பாத்திமா அயனாவரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு குடியேறினார்.

இந்நிலையில் கடந்த 9-ம் தேதி பாத்திமாவின் தாயார் பல்கீஸ் அயனாவரம் வசந்தா கார்டன் பகுதியில் ஒரு வாடகை வீடு பார்த்து தங்களது மகளையும், அவரது கணவரையும் அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் புதிய வீட்டில் பால் காய்ச்சி குடியேறிய பாத்திமா வீட்டருகே உள்ள நண்பர்களுக்கு பால் கொடுக்கச் சென்றுள்ளனர்.

அப்போது பாத்திமா பர்தா அணியாமல் சென்றதைப் பார்த்து கணவர் உமர் அவரிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது வாக்குவாதம் முற்றி உமர், பிரியாணி கரண்டியால் பாத்திமா தலையில் அடித்து விட்டு வீட்டில் இருந்த 2500 ரூபாய் பணத்தை எடுத்து கொண்டு தப்பிச் சென்றார். இதனால் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த பாத்திமாவை அவரது பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் அயனாவரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து உமரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாத்திமா சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.‌ இதனால் கொலை வழக்காக மாற்றம் செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பர்தா அணியாமல் சென்ற மனைவியை பிரியாணி கரண்டியால் கணவனே அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x