உடுமலை அருகே பைக் மீது கார் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு; 7 பேர் படுகாயம்


உடுமலை: உடுமலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், பெண்கள், சிறுவர்கள் உட்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

உடுமலை - பழநி சாலையில் உள்ள பாலப்பம்பட்டி கிராமத்தில் இச்சம்பவம் இன்று பிற்பகல் நடைபெற்றது. பாலப்பம்பட்டியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் மோகன்ராஜ் (52). டெக்ஸ்டைல் பழைய பஞ்சு மில் உரிமையாளர். இவர் அங்குள்ள பிரதான தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியே ஆலையை நடத்தி வந்துள்ளார். நேற்று பிற்பகல் அவருடைய ஆலையில் பணிபுரிந்த மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த டெக்ஸ்டைல் மில் பிட்டர் ராஜகோபால் (50) என்பவரை அழைத்து கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.

அப்போது மடத்துக்குளத்தில் இருந்து உடுமலை நோக்கி வந்து கொண்டிருந்த கேரள பதிவெண் கொண்ட மருதி வேகன் கார் எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். மேலும், கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மீதும் மோதியது. இதில், கோவை மதுக்கரையை சேர்ந்த ரங்கசாமி (68), உடுமலையை சேர்ந்தவர் சதாசிவம் (75) காயம் ஆகியோரும் படுகாயம் அடைந்தனர்.

மேலும், காரில் பயணித்த கேரளா மாநிலம் திருச்சூர்யை சேர்ந்த சிஜித் (41), அவரது மகள் அஸ்வதி (25), அவர்களது மகன்கள் கவுதம்ஜித் (9), திருக்கையஜித் (4), உறவினர் பெண் ரமணி (75) ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது.

காயமடைந்தவர்களை பொதுமக்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் மீட்டு உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு பரிசோதித்தபோது, மோகன்ராஜ், ராஜகோபால், ரங்கசாமி ஆகிய மூவரும் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மூவரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. காயம் அடைந்தவர்கள் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இச்சம்பவத்தில் வேகத்தடை இருப்பது தெரியாமல் நிலை தடுமாறிய கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதி அதன் பின் அருகில் பேருந்துக்காக சாலையோர இருக்கையில் உட்கார்ந்திருந்த ரங்கசாமி, சதாசிவம் ஆகியோர் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.

சாலை மறியல்: இதனிடையே, கிராம மக்கள் ஒன்று திரண்டு திண்டுக்கல் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் கற்கள், வாகனங்களை கொண்டு தடுப்பு ஏற்படுத்தி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். விபத்து எச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் உடுமலை- பழநி மார்க்கமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மறியல் தொடர்பாக பொதுமக்கள் கூறியதாவது, "பாலப்பம்பட்டி பகுதியில் இது போல அடிக்கடி சாலை விபத்துக்கள் நிகழ்வதாகவும், அதனால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். விபத்துக்களை தடுக்க நெடுஞ்சாலைத் துறையினர், போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

x