விருதுநகர்: ராஜபாளையத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் 5 பேரை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் இன்று கைது செய்தனர்.
ராஜபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கமானது பால் வளத்துறை ஆணையர் அனுமதி இல்லாமலும் உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமலும் கூட்டுறவு சங்கங்களின் சட்டப் பிரிவு மற்றும் சங்கத்தின் விதிகளுக்கு முரண்பாடாக செயல்பட்டுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி 2021 ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் இச்சங்கத்திற்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்ட வகையில் ரூ.25 லட்சத்து 76 ஆயிரத்து 434ம், பத்திரிகை விளம்பரம் மற்றும் சங்க காலண்டர்கள் அச்சடித்த வகையில் ரூ.15 லட்சத்து 13 ஆயிரத்து 553ம், கரோனா செலவுகள் என்ற தலைப்பில் தன்னிச்சையாக ரூ.51 லட்சத்து 7 ஆயிரத்து 665ம் செலவு செய்ததாகவும், சங்கக் கட்டிடம், கிளை கட்டிடங்களுக்கு மின் சாதனங்கள் கொள்முதல் மற்றும் மின் பராமரிப்பு செய்த வகையில் ரூ.9 லட்சத்து 77 ஆயிரத்து 818ம் செலவு செய்ததாகவும் மோசடி செய்திருப்பது தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், சங்க கட்டிடம், பால் கொள்முதல் மையங்களில் பராமரிப்பு செய்த வகையில் ரூ.7 லட்சத்து 30 ஆயிரத்து 49ம், சங்கப் பணியாளர்களுக்கு ஆணையர் அனுமதியை மீறி, தீபாவளி மற்றும் பொங்கல் பரிசு வழங்கியதாக ரூ.8 லட்சத்து 36 ஆயிரத்து 585ம் என மொத்தம் ரூ.1.17 கோடிக்கு பொய்யான ஆவணங்களை தயார் செய்து சங்கத்திற்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாக ஆவின் துணைப் பதிவாளர் நாகராஜ் விருதுநகர் மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவில் புகார் அளித்தார்.
அதன்பேரில், கூட்டுறவு சங்க நிர்வாகிகளான ராபஜபாளையத்தைச் சேர்ந்த அப்போதைய சங்கத் தலைர் வனராஜ், ஓய்வு பெற்ற மேலாளர் முருகேசன் (63), மேற்பார்வையாளர் ஜெயஜீவன், முன்னாள் மேலாளர் (பொறுப்பு) ராஜலிங்கம் (47), முன்னாள் மேலாளர் (பொறுப்பு) தங்க மாரியப்பன் (53), மேற்பார்வையாளர்கள் பன்னீர்செல்வம் (61), காளிராஜ் (56), ஸ்டோர் கீப்பர் சிவா ஆகிய 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக முருகேசன், ராஜலிங்கம், தங்கமாரியப்பன், பன்னீர்செல்வம், காளிராஜ் ஆகிய 5 பேரை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் இன்று கைது செய்தனர்.