‘இடிந்து விழுக்கூடிய அபாயகரமான கட்டிடம்’ - மதுரை தீ விபத்தும், பகீர் பின்னணியும்


மதுரை கட்ராபாளையத் தெருவில் தீ விபத்து நடந்த மகளிர் விடுதி. | படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி |

மதுரை: அபாயகரமான கட்டிடம் என கடந்த ஆண்டு மதுரை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியிருந்த கட்டிடத்தில்தான் நேற்று 2 ஆசிரியர்கள் உயிரிழந்த தீ விபத்து நடந்துள்ளது.

மதுரை மாநகராட்சி 100 வார்டுகளில் இடிந்து விழும் அபாயத்தில் உள்ள பழைய கட்டிடங்களை நகரமைப்புப் பிரிவு அலுவலர்கள் ஆய்வு செய்து தமிழ்நாடு நகர்ப் புற உள்ளாட்சி அமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் நோட் டீஸ் வழங்கி வருகிறார்கள். அதன்படி மதுரையில் மொத்தம் 433 கட்டிடங்களுக்கு இதுபோல் அபாயகரமான கட்டிடம் என மாநக ராட்சி நகரமைப்பு துறை நோட்டீஸ் வழங்கி உள்ளது.

7 நாட்கள் கெடு: இதில் 45 கட்டிடங்கள் இடிக்கப்பட்டுவிட்டன. மீதமுள்ள கட்டிடங்கள் மாநகராட்சி எச்சரிக் கையையும் மீறி தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்ராபாளையத் தெருவில் உள்ள மகளிர் விடுதியில் நேற்று நடந்த தீ விபத்தில் 2 ஆசிரியர்கள் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

இந்தக் கட்டிடத்துக்கு மாநகராட்சி நகரமைப்புப் பிரிவு வழங்கியிருந்த நோட்டீஸில், ‘‘தங்க ளுக்குச் சொந்தமான கட்டிடம், பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் இடிந்து விழும் நிலையில் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

இந்தக் கட்டிடத்தை 7 நாட்களுக்குள் இடித்து அப்புறப்படுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் ஏற் படக்கூடிய அசம்பாவிதங்களுக்கு தாங்களே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.

கட்டிடத்தை மாநகராட்சி இடித்து அப்புறப்படுத்தும். அதற்குண்டான செலவுத் தொகை தங்களிட மிருந்து வசூலிக்கப்படும்’’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், தீ விபத்து நடந்த கட்டிடத்தை ஆய்வு செய்து, இதுபோல், உள்ள அபாயகரமான கட்டிடங்களுக்கு இரண்டாவது நோட்டீஸ் வழங்கித் தேவையான நடவடிக்கையை எடுக்க உத்தரவிட்டார்.

இதுகுறித்து மாநகராட்சி நகரமைப்புப் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘‘அபாயகரமான கட்டிடம் என நோட்டீஸ் வழங் கியுள்ள 433 கட்டிடங்களில் பெரும் பாலானவை பைக்கரா வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளில் உள்ள கட்டிடங்கள்தான். மற்றவை அங்கொன்றும், இங்கொன்றுமாக மாநகர் முழுவதும் உள்ளன.

இதில் பல கட்டிடங்களை மறுசீரமைப்புச் செய்வதற்காகவும், புதிய கட்டிடங்கள் கட்டுவதற் காகவும் அந்த கட்டிட உரிமை யாளர்கள் தாங்களாக முன்வந்து அப்புறப்படுத்தி வருகிறார்கள். தீ விபத்து நடந்த மகளிர் விடுதி கட்டிடத்துக்கு மாநகராட்சி நோட்டீஸ்விட்டும் அந்தக் கட்டிடம் இடிக்கப்படவில்லை.

தடையில்லா சான்று: விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் குத்தகைக்கு எடுத்துதான் மகளிர் விடுதி நடத்தி உள்ளனர். குத்தகைதாரரை கட்டிட உரிமையாளர் காலி செய்ய அறிவுறுத்தி யுள்ளார். ஆனால், அவர்கள் காலி செய்யவி்ல்லை.

இதையடுத்து இரு தரப்பி னருக்கும் பிரச்சினை நீடித்து வந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி வெளித்தோற்றத்தில் உள்ள கட்டிடங்களை ஆய்வு செய்து அபாயகரமான கட்டிடம் என நோட்டீஸ் கொடுக்க முடியும். அந்தக் கட்டிடம், பலவீனமாக இல்லாவிட்டால் கட்டிட உரிமையாளர் தகுந்த பொறியாளர்களை வைத்து அதன் உறுதித்தன்மையை ஆய்வு செய்து பலமான கட்டிடம் எனச் சான்றிதழ் வழங்க வேண்டும்.

தீ விபத்து நடந்த கட்டிடத்துக்கு தீயணைப்புத் துறை தடையில்லாச் சான்று (என்ஓசி) வழங்கியுள்ளனர். அதுபோல் சுகாதாரச் சான்றிதழ், தொழில் உரிமம் போன்றவற்றை மாநகராட்சி வழங்கியுள்ளது.

கட்டிடத்தில் உள்ள வசதிகள், விடுதி நடத்துவதற்கு தகுதியானதா? என்பதை சமூக நலத்துறை கண்காணித்து ஆய்வு செய்திருக்க வேண்டும்’’ என்றனர்.

x