ஓசூரில் புதையல் எடுத்துத் தருவதாகக் கூறி ரூ.10 லட்சம் மோசடி, கடத்தல் வழக்குகளில் 8 பேர் கைது


ஓசூர்: ஓசூரில் புதையல் எடுத்துத் தருவதாகக் கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்த 2 பேர் மற்றும் மோசடி செய்தவர்களைக் கடத்திய வழக்கில் 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் மாருதி. இவர் கடந்த 10-ம் தேதி ஓசூர் நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில், ‘கடந்த 7-ம் தேதி லேகியம் விற்பனை செய்ய ஓசூர் வந்த தனது தம்பி ராகேஷ் (22) மற்றும் ராமச்சந்திரா (45) ஆகிய இருவரையும் மர்ம நபர்கள் கடத்தி சென்று ரூ.75 லட்சம் கேட்டு மிரட்டுவதாக’ தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், ஓசூரைச் சேர்ந்த நாகராஜன் (50), என்பவர் நேற்று முன்தினம் ராகேஷ் மற்றும் ராமச்சந்திராவுடன் நகரக் காவல் நிலையத்துக்கு வந்தார்.

மேலும், ராகேஷ் மற்றும் ராமச்சந்திரா ஆகிய இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஓசூரில் லேகியம் மற்றும் சித்த மருந்துகள் விற்பனை செய்ய வந்தபோது, தனக்கு அறிமுகம் கிடைத்தது.

அப்போது, எனது நிலத்தில் புதையல் இருப்பதாகவும் அதை எடுத்துத் தருவதாகவும் கூறி என்னிடம், ராகேஷ் மற்றும் ராமச்சந்திரா ஆகியோர் ரூ.10 லட்சம் வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டு, தப்பிச் சென்றனர்.

தற்போது, இருவரிடமும் சாதுர்யமாக பேசி ஓசூருக்கு வரவழைத்தேன். பின்னர் இருவரையும் எனது நண்பர்கள் உதவியுடன் காரில் கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டியதாக நாகராஜன் தெரிவித்தார்.

இதையடுத்து, நாகராஜன் மற்றும் கடத்தலுக்கு உதவிய வாணியம்பாடியைச் சேர்ந்த பாண்டியன் (43), ஓசூரைச் சேர்ந்த ராஜா (45), ரிஸ்வான் (36), தேன்கனிக்கோட்டை முபாரக் பாஷா (36), சையத் மோமின் (32) ஆகிய 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

மேலும், பணம் மோசடி தொடர்பாக ராகேஷ் மற்றும் ராமச்சந்திரா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து, 2 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

x