நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளைஞரிடம் செல்போன், பணம் பறிப்பு


நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளைஞரை கத்தியை காட்டி மிரட்டி, செல்போன் மற்றும் பணத்தை பறித்துச் சென்ற 2 இளஞ்சிறார்கள் உள்பட 4 பேரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திருப்பாச்சனூர் காவேரி பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியராஜன்(40). இவர் கடந்த 8-ம்தேதி தாம்பரம் செல்வதற்காக, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தின் 2-வது நடைமேடையில் இரவு 10 மணியளவில் காத்திருந்தார். அப்போது, அங்கு 4 பேர் கொண்டகும்பல் வந்து, பாண்டியராஜனிடம் கத்தியை காட்டி மிரட்டி, செல்போன், ரூ.7,000 பணத்தை பறித்து தப்பிச்சென்றது.

இதுகுறித்து எழும்பூர் ரயில்வே போலீஸில் பாண்டியராஜன் புகார் கொடுத்தார். புகாரின்பேரில், எழும்பூர் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்தனர். மேலும், குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து தேடிவந்தனர்.

இதற்கிடையில், கோட்டை ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் காலையில் சந்தேகத்துக்கிடமாக 4 பேர் நிற்பதாக ரயில்வே போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு ரயில்வே தனிப்படை போலீஸார் விரைந்து சென்று, அவர்களை சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தனர்.

அதில், அவர்கள் ஆலந்தூரைச் சேர்ந்த தங்கராஜ்(21), கார்த்திக்(21) மற்றும் இரண்டு இளஞ்சிறார்கள் என்பதும், பாண்டியராஜனிடம் கத்தியைகாட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணத்தை திருடியநபர்கள் என்பதும் தெரிய வந்தது. அவர்களிடம் செல்போன் மற்றும் ரூ.4,000 பணம் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, அவர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

தங்கராஜ், கார்த்திக் ஆகியோரை புழல் சிறையில் அடைக்கவும், இரண்டு இளஞ்சிறார்களை கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பயணியிடம் செல்போன் மற்றும் பணத்தை பறித்த குற்றவாளிகளை துரிதமாகப் பிடித்த தனிப்படை போலீஸாரை ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன் பாராட்டினார்.

x