வேலூர்: வேலூர் சிறையில் கைதியை சித்ரவதை செய்த விவகாரத்தில் டிஐஜி ராஜலட்சுமியை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, சிறைத்துறை ஏடிஜிபி மகேஷ்வர் தயாள் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியாக இருந்த சிவக்குமார் என்பவரைத் திருட்டு புகாரில் 95 நாட்கள் தனிமைச் சிறையில் அடைத்து துன்புறுத்தியதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் வேலூர் சரக சிறைத் துறை டிஐஜி ராஜலட்சுமி உள்ளிட்ட 14 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வழக்கு விசாரணை அதிகாரியான சென்னை சிபிசிஐடி கண்காணிப்பாளர் வினோத் சாந்தாராம் மற்றும் போலீஸார் சேலம்,வேலூர் மத்திய சிறைகளில் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், வேலூர் சரக சிறைத் துறை டிஐஜி ராஜலட்சுமி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். சென்னை சரக சிறைத் துறை டிஐஜி முருகேசன், வேலூர் சரக பணியைக் கூடுதலாகக் கவனிக்க உள்ளார்.
அதேபோல, வேலூர் ஆண்கள் மத்திய சிறைக் கண்காணிப்பாளர் (பொ) அப்துல் ரகுமான், சென்னைபுழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு கண்காணிப்பாளராக இருந்த பரசுராமன், வேலூர் மத்திய சிறை மற்றும் பெண்கள் சிறையின் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவுகளை சிறைத் துறை ஏடிஜிபி மகேஷ்வர் தயாள் நேற்று பிறப்பித்துள்ளார். மேலும், வேலூர் மத்திய சிறையில் ஏடிஜிபி மகேஷ்வர் தயாள் நேற்று 2 மணி நேரம் ஆய்வு மேற்கொண்டார். உரிய விதிகளின்படி சிறைக் கைதிகளை நடத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.