பெரம்பலூர் அருகே பைக்கில் திருமண விழாவிற்கு சென்ற தம்பதி, டிப்பர் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் தண்ணீர் பந்தல் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (24). கூலி தொழிலாளி. இவரது மனைவி ரேணுகா(20). இருவரும் நேற்று இரவு பண்ணக்காரன்பட்டியில் உறவினர் திருமண விழாவிற்கு பைக்கில் சென்றனர். கோவிந்தராஜ் மோட்டார் சைக்கிளை ஓட்டினார், ரேணுகா பின்னால் அமர்ந்திருந்தார். செஞ்சேரி பைபாஸ் ரோட்டில் தனியார் கல்லூரி அருகே இருவரும் சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக வேகமாக வந்த ஒரு டிப்பர் லாரி, எதிர்பாராதவிதமாக பைக்கில் சென்ற தம்பதி மீது மோதியது.
இதில் தூக்கிவீசப்பட்ட 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதில் கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ரேணுகா பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தார். இதனை பார்த்த அவ்வழியாக சென்ற சிலர், அந்த பகுதி மக்களுடன் இணைந்து ரேணுகாவை மீட்டு பெரம்பலூர் தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே ரேணுகா பரிதாபமாக இறந்தார். விபத்தில் கணவன்-மனைவி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பலியான கோவிந்தராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதன் பின்னர் ரேணுகாவின் உடலை உறவினர்கள் வீட்டுக்கு எடுத்து சென்றனர். இதுகுறித்து, தகவல் அறிந்த பெரம்பலூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், வழக்குப் பதிவு செய்து தலைமறைவான டிப்பர் லாரி டிரைவரை தேடி வருகிறார்கள்.
இதையும் வாசிக்கலாமே...
நடிகைக்கு பாலியல் தொல்லை... சர்ச்சையில் இயக்குநர் சீனு ராமசாமி!