ஆவடி: ஆவடி கூலி தொழிலாளி கொலை வழக்கில் கைதான 8 பேரையும், திருவள்ளூர் அடுத்த மணவாள நகரை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி ஒருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆவடி காவல் ஆணையர் சங்கர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை, அம்பத்தூர், மண்ணூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் காஜா மொய்தீன் (27). கூலி தொழிலாளியான இவர், கடந்த ஜூலை 7ம் தேதி, ஆவடி நந்தவன மேட்டூர், காந்தி தெருவைச் சேர்ந்த தன் நண்பர் கார்த்திக் (23) வீட்டில் தங்கி இருந்தார். அப்போது, மது அருந்திக் கொண்டிருந்த, காஜா மொய்தீன் மற்றும் கார்த்திக் ஆகியோருக்கு இடையே ரூ.25 ஆயிரம் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அந்த தகராறு முற்றியதன் விளைவாக, காஜா மொய்தீன் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்குத் தொடர்பாக ஆவடி போலீஸார், கார்த்திக் (23) மற்றும் அவரது நண்பர்களான பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (25), லலித் (21), லோகேஷ் (25), அஜித் (20), முகமது ஆசீப் (23), செங்குன்றத்தைச் சேர்ந்த சாந்தகுமார் (21), சென்னை, புதுப்பேட்டையைச் சேர்ந்த ஹர்சாத் இர்பான் (21) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், கார்த்திக் உள்ளிட்ட 8 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க இன்று ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவிட்டார். அதேபோல், திருவள்ளூர் அடுத்த மணவாள நகர் - எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் என்கிற பிரவீன் குள்ளா (25). சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது ஏற்கனவே 14 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், மணவாள நகர் காவல் நிலைய எல்லையில் நடந்த குற்ற சம்பவம் தொடர்பாக பிரவீன் குள்ளா, கைதாகி புழல் மத்திய சிறையில் இருந்து வருகிறார். இச்சூழலில், பிரவீன் குள்ளாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், சிறையில் அடைக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவிட்டார்.