ஆரம்ப சுகாதார நிலையம் தீ வைத்து எரிப்பு: மணிப்பூரில் அதிகரிக்கும் பதற்றம் 


இம்பால்: ஜிரிபாம் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜிரிபாம் மாவட்டத்தின் பொரோபெக்ரா பகுதியில், போலீஸ் அவுட்போஸ்டிலிருந்து 200 மீட்டருக்கும் குறைவான தொலைவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் இன்று அதிகாலையில் தீவைத்து எரிக்கப்பட்டது. இச்சம்பவத்தின் போது ஆரம்ப சுகாதார நிலையத்தில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை.

இதனையடுத்து பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் இன்னும் அறிக்கை வெளியிடவில்லை.

முன்னதாக, செப்டம்பர் 7 அன்று ஜிரிபாமில் நடந்த வன்முறையில் 5 பேர் கொல்லப்பட்டனர். அப்போது மெதி இன மக்கள் வசிக்கும் கிராமங்களை குறிவைத்து பலத்த துப்பாக்கிச் சூடு மற்றும் சக்திவாய்ந்த குண்டுகள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து மணிப்பூரின் சில மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் சில மாவட்டங்களில் இணைய சேவையும் துண்டிக்கப்பட்டது.

மே 2023 முதல் மணிப்பூரின் மலை மாவட்டங்களில் ஆதிக்கம் செலுத்தும் குக்கி பழங்குடியினருக்கும், பள்ளத்தாக்கில் ஆதிக்கம் செலுத்தும் மேதி சமூகத்தினருக்கும் இடையே நடந்த இன வன்முறையில் 220க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

x