காதலனை நம்பி கட்டிய கணவனை விட்டுவிட்டு வந்த இளம்பெண்ணை நண்பர்களுக்கு விருந்தாக்கியதுடன், கொலையும் செய்துள்ள காதலனின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தாலுகா கீரணிவயல் பகுதியைச் சேர்ந்தவர் வினோதினி (22 ) இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் கடையநல்லூர் அருகே வலசை கிராமத்தைச் சேர்ந்த மனோரஞ்சித் (22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காதலாக மாறியது. காதலன் நினைவாக வலது கையில் எம்.வி. என்று ஆங்கிலத்திலும், காதலை குறிக்கும் வகையில் 'ஹார்டின்' படமும் வினோதினி பச்சைகுத்தியுள்ளார்.
ஆனால் இந்த காதல் குறித்து தெரிந்துகொண்ட வினோதினியின் பெற்றோர், அவருக்கு வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்தனர். இதனைத்தெரிந்து கொண்ட மனோரஞ்சித் காதலியை மறக்க முடியாமல் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று உறவினர்கள் காப்பாற்றியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து தெரிய வந்ததும் வினோதினி, கணவரை விட்டுவிட்டு கடந்த 20 நாட்களுக்கு முன்பு காதலன் மனோரஞ்சித்தை தேடி கடையநல்லூர் அருகே உள்ள வலசை கிராமத்திற்கு வந்துள்ளார். இருவரும் வலசை பகுதியில் சுற்றித்திரிந்துள்ளனர். இந்தநிலையில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதியன்று வலசை பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து சாக்கு மூட்டையில் வினோதினி சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த கொலை சம்பந்தமாக விசாரணை செய்த தனிப்படை போலீஸார் சேந்தமரம் சாலை கண்மணிபுரம் மற்றும் வலசைப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் விலை உயர்ந்த புதிய பைக்கில் வினோதினியை வலசை கிராமத்திற்கு மனோரஞ்சித் அழைத்து வந்தது தெரியவந்தது. மனோரஞ்சித்தை போலீஸார் தேடியபோது அவர் கோவையில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கோவை விரைந்த போலீஸார், மனோரஞ்சித்தை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் வினோதினியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். கொலை குறித்து அவர் கூறிய விவரங்கள் போலீஸாரையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
கட்டிய கணவரைக்கூட விட்டுவிட்டு தன்னை நம்பி வந்த வினோதினியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று, தனது நண்பர்களான வலசை காலனி பகுதியைச் சேர்ந்த மகா பிரபு, பரத், கடையநல்லூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்த மணிகண்டன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 5 நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் வெகுவாக உடல் நலம் பாதிக்கப்பட்ட வினோதினியை அனைவரும் சேர்ந்து கொலை செய்துள்ளனர்.
அதன் பின்னர் சாக்கு முட்டையில் கட்டி ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள பயன்பாடு இல்லாத கிணற்றில் போட்டுவிட்டு யாருக்கும் தெரியாமல் ஊரில் நடமாடி கொண்டிருந்தனர். மனோரஞ்சித்தின் வாக்குமூலத்தை அடுத்து தனிப்படை போலீஸார் வழக்கு பதிவு செய்து ஐந்து பேரையும் கைது செய்தனர். நான்கு பேரை பாளையங்கோட்டை சிறையிலும் 17 வயசு சிறுவன் சீர்திருத்தப் பள்ளியிலும் அடைக்கப்பட்டனர். இச் சம்பவம் வலசை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.