ஐபோன் விற்பனையில் அமேசான் நிறுவனத்தை அலற வைத்த அடேங்கப்பா மோசடி!


ஐபோன்

ஐபோன் உள்ளிட்ட விலை அதிகமுள்ள எலெக்ட்ரானிக் பொருட்களின் விற்பனையில், அமேசான் ஆன்லைன் தளத்தை கோடிகளில் ஏமாற்றிய மோசடி தற்போது வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்துள்ளது.

தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்து வர்மா உள்ளிட்டோர் நடிப்பில் 3 வருடங்களுக்கு முன்னர் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. ஆன்லைன் வணிக தளங்களில் எலெக்ட்ரானிக் சாதனங்களை வாங்கி, பின்னர் அவற்றை ரிட்டர்ன் செய்தவன் மூலம் அரங்கேறும் மோசடி வலையை அந்த திரைப்படத்தில் சுவாரசியமாக அம்பலப்படுத்தி இருப்பார்கள்.

கிட்டத்தட்ட அதே பாணியில், ஆனால் வேறு கோணத்தில் அரங்கேறிய மோசடி வலையின் ஒரு பகுதி பெங்களூரு பின்னணியில் வெளிப்பட்டுள்ளது. இது தொடர்பாக வடக்கு பெங்களூருவை சேர்ந்த சிராக் குப்தா என்ற பொறியியல் மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமேசான் டெலிவரி

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், மேக்புக், ஐபேட் என விலையில் தலா லட்சத்தை தொடும் எலெக்ட்ரானிக் சாதனங்களை அமேசான் தளத்தில் குப்தா ஆர்டர் செய்துள்ளார். பொருட்களை பெற்றுக்கொண்ட வேகத்தில் அவை சரியில்லை அல்லது தனது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்ற காரணங்களுடன் அவற்றை திருப்பி அனுப்புகிறார்.

வாடிக்கையாளர் சேவையில் ஆன்லைன் வணிக தளங்களில் அனுமதிக்கப்பட்ட விதிகளின்படி குப்தா இவற்றை நிகழ்த்துகிறார். அதன்படி ஆப்பிள் நிறுவன சாதனங்கள் திரும்ப வந்து சேர்ந்ததாக அமேசானின் ஆன்லைன் நிறுவனத்தின் கணக்கிலும் ஏறுகிறது. ஆனால் அப்பொருட்கள் நிஜத்தில் திரும்புவதில்லை.

இடையில் அமேசான் ஆன்லைன் கணக்குகளை எளிதில் அணுகும் அதன் முன்னாள் ஊழியர் ஒருவர், ஐபோன் உள்ளிட்ட சாதனங்கள் அமேசான் கணக்கில் ஏறியதாக திருத்தம் செய்கிறார். பெங்களூருவின் பீன்யா டெலிவரி மையத்தின் வாயிலாகவே இந்த மோசடிகள் அனைத்தும் அரங்கேறி இருக்கின்றன.

ஆன்லைன் மோசடி

பீன்யா மட்டுமன்றி தெரிவு செய்யப்பட்ட ஒரு சில டெலிவரி மையங்களில் இந்த மோசடிகள் தொடர்ந்துள்ளன. இந்த வகையில் கோடிக்கணக்கில் நட்டம் ஏற்பட்டதை அடுத்து, அமேசானின் உள்விவகாரங்களின் தணிக்கையின்போது குட்டு வெளிப்பட்டிருக்கிறது. அமேசான் நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் பெங்களூரு போலீஸார் இணைந்து நடத்திய விசாரணையில் பின்னர் இந்த உண்மைகள் வெளிப்பட்டுள்ளன.

மத்திய பிரதேசத்திலிருந்து அனைவரையும் டெலகிராம் வாயிலாக ஒருங்கிணைக்கும் சூத்திரதாரி, ரகசிய பணப்பரிவர்த்தனைக்கு கிரிப்டோகரன்சி என திட்டமிட்டு மிகப்பெரும் டெக் கிரிமினல் கூட்டம் இவற்றை அரங்கேற்றி இருப்பதும் தற்போது தெரிய வந்திருக்கிறது. அமேசான் நிறுவனத்தின் அதிகாரிகளும், போலீஸாரும் இணைந்து துழாவும் இந்த விசாரணையில் சர்வதேச அளவிலான நெட்வொர்க் சிக்கவிருப்பதாகவும் தெரிய வருகிறது.

x