சென்னை கோயம்பேட்டில் இருந்து ஓசூர் நோக்கி தமிழ்நாடு அரசுப் பேருந்து இன்று அதிகாலை 3 மணி அளவில் 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பேருந்தை ஜெகன் என்ற ஓட்டுநர் ஓட்டி வந்தார். பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பம் பகுதியில் பூந்தமல்லி பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அந்தப் பகுதியில் சாலை பணிகள் அமைக்கும் பணிகளுக்காக ஜேசிபி இயந்திரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. எதிர்பாராத விதமாக பேருந்து ஜேசிபி இயந்திரத்தின் மீது மோதியது. இதில் ஓட்டுநர் ஜெகன் மற்றும் பெண்கள், குழந்தைகள் உட்பட 13 பேர் காயமடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மாற்று பேருந்து வரவழைக்கப்பட்டு மற்ற பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் லேசான காயங்களுடன் பயணிகள் சிகிச்சை பெற்ற பின்னர் அவர்களும் மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். பூந்தமல்லி பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெறும் பகுதியில் தடுப்புகளோ முன்னெச்சரிக்கை பலகைகளோ எதுவும் அமைக்கப்படாததே இந்த தொடர் விபத்துக்களுக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.