குடித்த டீக்கு பணம் கொடுக்காத போலீஸ்காரர்கள்... முதல்வரின் தனிப்பிரிவில் புகார் செய்த கடைக்காரர்!


காவல் நிலையம் அருகில் இருந்த டீ கடையில் தினமும் டீ குடித்து விட்டு அதற்கு காசு கொடுக்காமல் பாக்கி வைத்த சம்பவம் கள்ளக்குறிச்சி அருகே நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக டீ கடைக்காரர் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் செய்தது போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கரியலூரில் காவல் நிலையம் ஒன்று உள்ளது. இந்த காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீஸார் மற்றும் காவல் அதிகாரிகள், அருகில் உள்ள டீ கடையில் இருந்து தினமும் டீ வாங்கியுள்ளனர். ஆனால் அவர்கள் வாங்கி சென்ற டீக்கு பணம் கொடுப்பதில்லை.

இதுகுறித்து டீ கடைக்காரர் போலீஸாரிடம் பணம் கேட்கும் போதெல்லாம் பைய கொடுப்போம் என்றவாறே வாங்கி குடித்த டீக்கு பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் போலீஸார் டீ வாங்கிய கணக்கு ரூ.5 ஆயிரத்தை தாண்டி சென்றது.

இதனால் வெறுத்து போன டீ கடைக்காரர், போலீஸார் டீ பாக்கி வைத்துள்ளது குறித்து முதல்வரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார். இந்த செய்தி கரியலூர் காவல் நிலைய போலீஸாரின் காதுகளுக்கு வரவே, அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக டீ கடைக்கு சென்று டீ பாக்கியினை செட்டில் செய்துள்ளனர்.

x