நண்பர்களுக்குள் மோதல்… ஊர்க்காவல் படை வீரர் வெட்டிக்கொலை!


தேனி மாவட்டம் கூடலூரில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் பிறந்தநாளன்று ஊர்க்காவல் படை காவலர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூடலூர் முத்தையர் தெருவை சேர்ந்த நாகேந்திரன் (27) என்பவர் 3 ஆண்டுகளாக ஊர்க்காவல்படை வீரராக பணியாற்றி வந்தார். இவரது நண்பரான பிரகாஷ் என்பவர் (25) கூலி வேலை பார்த்து வந்தார்.

அண்மையில் நாகேந்திரனின் லேப்டாப்பை பிரகாஷ் வாங்கி சென்றதாக தெரிகிறது. பின்னர் அதனை பழுதாக்கி திருப்பி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் நாகேந்திரன் ஆத்திரம் அடைந்தார்.

நாகேந்திரன் மற்றும் பிரகாஷ்

அதேபோல், நாகேந்திரனின் மோட்டார் சைக்கிளை வாங்கி சென்று பிரகாஷ் பழுதாக்கி கொடுத்துள்ளார். எனவே, லேப்டாப் மற்றும் மோட்டார் சைக்கிளை சரி செய்ய நாகேந்திரன் பிரகாஷிடம் அடிக்கடி பணம் கேட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு நாகேந்திரனுக்கு போன் செய்த பிரகாஷ் பணம் தருவதாக கூறியுள்ளார். அதன்பிறகு மோட்டார் சைக்கிளில் நாகேந்திரன் வெளியே வந்த போது, பிரகாஷ் அவரை சரமாரியாக வெட்டினார். இதில் நாகேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர் அரிவாளுடன் காவல் நிலையத்தில் சென்று பிரகாஷ் சரண் அடைந்தார். சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x