வெளிமாநில சமூக விரோதிகளை பிடிக்க புதிய தொழில்நுட்பம் - மதுரை காவல் புலனாய்வு பிரிவு தீவிரம்


மதுரை: வெளிமாநிலங்களைச் சேர்ந்த சமூக விரோதிகள், கொள்ளையர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அவர்களை உடனே பிடிக்க புதிய தொழில்நுட்ப வசதியை மதுரை மாநகர் காவல்துறை விரைவில் செயல்படுத்த உள்ளது.

சமூகத்தில் பெரும்பாலும் தனிநபர், சொத்துகள், அரசுக்கு எதிராகவே குற்றச் செயல்கள் நடக்கின்றன. இதுதொடர்பான விவரங்களை வகைப்படுத்தி மாவட்ட, மாநகர, மாநில குற்றப் பதிவேடு கூடங்களில் போலீஸார் சேகரிக்கின்றனர். இதுதவிர தேசிய அளவிலும் குற்றப் பதிவேடு பிரிவு செயல்படுகின்றது.

இவற்றின் மூலமே பெரும்பாலும் பழைய குற்றவாளிகள், குற்றத்தன்மை, குற்றச் சரித்திரப் பட்டியலில் (ரவுடி) இடம் பெறுவோரின் பின்னணி குறித்த விவரங்கள் அந்தந்த காவல் நிலையங்கள் மூலம் சேகரிக்கப்படுகிறது.

இப்புள்ளி விவரங்கள் குற்றங்களை தடுக்க உதவுகின்றன. இருப்பினும் வெளிமாநிலம், வெளிநாடுகளில் குற்றச் செயல் புரிந்தவர்கள் தப்பி வந்து தமிழகத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடும்போது அவர்களது பின்னணி விவரங்களை கண்டறிய புதிய தொழில்நுட்பம் மதுரை உள்ளிட்ட இடங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான உபகரணங்களை மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதுகுறித்து மத்திய புலனாய்வு பிரிவினர் கூறியதாவது: காவல் துறை நவீனமயமாக்கலின் செயல் திட்டமே இது. இதன்படி காவல் நிலையத்தில் சி.சி.டி.என்.எஸ்., (கிரைம் மற்றும் கிரிமினல் டிராக்கிங் நெட்வொர்க் சிஸ்டம்) மற்றும் மாவட்ட, மத்திய குற்றப்பதிவேடு கூடங்கள் மூலம் தினமும் நடக்கும் குற்றச் செயல்கள், எப்ஐஆர் உள்ளிட்ட விவரங்களை வகைப்படுத்தி சேகரித்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இவை மாநில குற்றப் பதிவேடு பிரிவில் ஒருங்கிணைக்கப்படுகிறது. இவற்றின் மூலம் குற்றச் செயல் புரிவோரின் விவரங்கள் துல்லியமாக கண்டறியப்படுகின்றன. இது மாநிலத்துக்குள் செயல்படும் குற்றவாளிகளை கண்டறிய பெரிதும் உதவும். ஆனால், வெளி மாநிலம், வெளிநாடுகளை சேர்ந்த குற்றப் பின்னணி உடையவர்களின் தரவுகள் சேகரிப்பை ஒருங்கிணைக்காத நிலையில், இக்குற்றவாளிகளை கண்டறிவதில் சிக்கல் உள்ளது.

இதற்கும் தீர்வு காணும் வகையில், ‘ஸ்மாக்’ எனும் புதிய மென்பொருள் தொழில்நுட்பத்தை மாவட்ட வாரியாகச் செயல்படுத்த மத்திய புலனாய்வுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த மென்பொருள் தேசிய அளவில் குற்றங்களின் தரவுகளை உள்ளடக்கியதாக இருக்கும்.

இதன்மூலம் வெளிநாடு, வெளிமாநில நபர்களின் பெயர் அல்லது ஆதார் எண் உள்ளிட்ட சில தகவல்களை ‘ஸ்மாக்’ மென்பொருளில் உள்ளீடு செய்தால் அவர்களது குற்றப் பின்னணியை துல்லியமாக அறிந்து கொள்ளலாம். நாட்டின் பிற பகுதிகளில் குற்றச் செயலில் ஈடுபட்டு தமிழகத்தில் தங்கியிருப்பவர்களை விரைந்து கைது செய்ய முடியும் என்று கூறினர்.

x