மசாஜ் சென்டர் உரிமையாளரிடம் 25 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய இந்தியன் மக்கள் மன்ற தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பள்ளிக்கரணை அடுத்த ஜல்லடையன் பேட்டையை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் என்கிற பாஸ்கரன்(35). இவர் தாம்பரம் சேலையூர் பகுதியில் சொந்தமாக மசாஜ் பார்லர் நடத்தி வருகிறார். இந்தநிலையில், தாம்பரம் பகுதியை சேர்ந்த இந்தியன் மக்கள் மன்ற தலைவர் வராகி, தன்னையும் மசாஜ் பார்லரில் தொழில் பார்ட்னராக சேர்க்கும்படி, கார்த்திக்கை தொடர்ந்து மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் தன்னை பார்ட்னராக சேர்த்துக்கொண்டால், போலீஸிடம் இருந்து காப்பாற்றுவதாகவும் ஒருவேளை போலீஸில் சிக்கினால் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள போலீஸ் தான் நடத்த சொன்னார்கள் என, அவர்கள் மீது பழி போடுங்கள், மீதியை நான் பார்த்துக்கொள்கிறேன் என கட்டாயப்படுத்தி உள்ளார். இதற்கு கார்த்திக் சம்மதம் தெரிவிக்காததால் ஆத்திரமடைந்த வராகி கடந்த 6ம் தேதி கார்த்திக் மேடவாக்கம் வெள்ளக்கல், சுடுகாடு வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த எதிரே காரில் வந்த போது வராகி அவரை வழிமறித்துள்ளார்.
பின்னர் நான் சொல்வதை கேட்கவில்லை என்றால் உன்னுடைய வீடியோ ஒன்று என்னிடம் உள்ளது. அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து உன்னையும் உன் குடும்பத்தையும் அசிங்கப்படுத்தி விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும், எனக்கு 25 லட்சம் பணம் தரவேண்டும், இல்லையென்றால் குடும்பத்தோடு கொலை செய்து விடுவேன் என்றும் நான் சொல்வதுபோல் இப்போது பேசு என கார்த்திக்கை மிரட்டி, பேச வைத்து, ஒரு வீடியோ எடுத்து, அந்த வீடியோவை கடந்த 14ம் தேதி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட கார்த்திக் இது குறித்து பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் நேற்று இரவு போலீஸார் கிழக்கு தாம்பரம் பழைய ஜிஎஸ்டி சாலையில் உள்ள அவரது வீட்டில் வைத்து வராகியை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் அவர் மீது மிரட்டல், மிரட்டி பயத்தை ஏற்படுத்தி பணம் பறித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அதிகாலை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.