வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு - ஆந்திர எல்லையில் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பணம் வைத்து சூதாடிய 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
குடியாத்தம் அடுத்த சைனகுண்டா மலை அடிவாரத்தில் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக வேலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. இதற்கு முன்னரே காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், தகவல் கிடைத்தவுடன் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.
இதையடுத்து, மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன் உத்தரவின்பேரில் 15க்கும் மேற்பட்ட போலீசார் சைனகுண்டா மலை அடிவாரத்தில் அதிரடி சோதனை நடத்தினர். காவல்துறையினரை கண்டதும் சூதாட்ட கும்பல் நாலாபுறமும் சிதறி ஓடியது.
தீவிர சோதனையில் இறங்கிய போலீஸார் சூதாட்ட கும்பலைச் சேர்ந்த 17 பேரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து சீட்டு கட்டுகள், 15 செல்போன்கள், 3 பைக்குகள் மற்றும் 62.41லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
கைதானவர்கள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்றும், கும்பலின் தலைவன் பூங்குளம் கிராமத்தை சேர்ந்த இளையராஜா (40) என்பதும் தெரியவந்துள்ளது. இதனிடையே கைது செய்யப்பட்ட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தப்பிச்சென்ற கும்பலிடம் ஒரு கோடி வரை பணம் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. பணத்துடன் தலைமறைவான கும்பலை பிடிக்க வேலூர் தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.