அதிகாரிகள் டார்ச்சர்; தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கோயில் ஊழியர் - முற்றுகை போராட்டம்


நவீன் சத்ரு

அதிகாரிகள் கொடுத்த பணி நெருக்கடியின் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான ராமேஸ்வரம் கோயில் ஊழியர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயில் ஊழியர்கள் போராட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் சுப்புராஜ். இவரது மகன் நவீன்சத்ரு(36). இவருக்கு லாவண்யா என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். நவீன் சத்ரு கடந்த பிப்ரவரி மாதம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் காவலர் பணியில் சேர்ந்தார். இதனையடுத்து இங்குள்ள இரட்டைபிள்ளையார் கோயில் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து வேலைக்குச் சென்று வந்தார்.

இந்நிலையில் கோயில் அதிகாரிகள் விதிகளுக்கு மாறாக தன்னிடம் அதிக நேரம் வேலை வாங்குவதாகவும், இதனால் மன உளைச்சலாக இருப்பதாகவும் அவரது குடும்பத்தினரிடம் கடந்த சில நாட்களாக கூறிவந்துள்ளார். அவர்கள் நவீன் சத்ருவுக்கு ஆறுதல் கூறி வந்துள்ளனர்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில்

இதனிடையே நேற்று கோயிலில் பணிக்கு சென்று திரும்பிய நவீன் சத்ரு வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த ராமேஸ்வரம் நகர் காவல் நிலைய போலீஸார் நவீன் சத்ரு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இச்சம்பவம் தொடர்பாக நவீன் சத்ருவின் மனைவி லாவண்யா அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நவீன் சத்ருவின் தற்கொலைக்கு காரணமான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோயில் ஊழியர்களும், நவீன் சத்ரு குடும்பத்தினரும் கோயில் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு வந்த சிறப்பு வட்டாட்சியர் அப்துல் ஜபார், டி.எஸ்.பி உமாதேவி, கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.

x