சென்னையை அடுத்த மணலியில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மணலியை அடுத்த மாத்தூர் எம்எம்டிஏ பகுதியைச் சேர்ந்தவர் உடையார். இவரது மனைவி சந்தானலட்சுமி. இவர்களது பேத்திகள் பிரியதரிதா, சங்கீதா, பவித்ரா ஆகிய சிறுமிகளாவர். இவரது வீட்டில் இன்று அதிகாலை பலத்த சத்தம் கேட்டது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது சிலிண்டர் வெடித்து சந்தான லட்சுமியும், 3 சிறுமிகளும் உயிரிழந்த நிலையில் இருந்தனர்.
இதையடுத்து அங்கு மயக்கமடைந்த நிலையில் இருநத உடையாரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்த மாதவரம் பால் பண்ணை போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கும் அனுப்பி வைத்தனர். சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்தது எப்படி என்பது குறித்து உடையாரிடம் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
சமையல் எரிவாயு சிலிண்டரை இரவு மூடாமல் விட்டுவிட்டனரா அல்லது இது தற்கொலை முயற்சியா என்ற கோணத்தில் போலீஸார் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள். வீட்டு சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.