ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை என்ஜிஓ நகரைச் சேர்ந்தவர் ஜோசப் பிலிக்ஸ். இவரது தாய் ரீட்டா(89). இவர், உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக படுத்த படுக்கையாக உள்ளார்.
இதனால், ரீட்டாவை பராமரிக் கவும், வீட்டு வேலைகளை செய்யவும் பழைய ஜோலார் பேட்டையைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரின் மனைவி பத்மினி(40) என் பவரை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஜோசப் பிலிக்ஸ் வேலைக்கு சேர்த்தார். இந்நிலையில், பத்மினி நேற்று வழக்கம்போல் வீட்டுக்கு வேலைக்கு சென்றார்.
அப்போது கைபேசி மூலம் ஜோசப் பிலிக்சை தொடர்பு கொண்ட பத்மினி, மர்ம நபர்கள் இருவர் வீட்டின் கதவை தட்டினர். கதவை திறந்தபோது என் மீது மிளகாய் பொடியை தூவிவிட்டு வீட்டில் இருந்த 6 பவுன் தங்க நகைகளை அபகரித்துக்கொண்டு தப்பியோடியதாக தெரிவித்தார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஜோசப் பிலிக்ஸ் உடனே வீட்டுக்கு வந்தார். மேலும், பத்மினியின் நடவடிக்கையில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து ஜோசப் பிலிக்சின் மனைவியும், வேலன் நகர் அரசு நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியையு மான அனிமோல் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், காவல் துறையினர் விரைந்து சென்று ஜோசப் பிலிக்ஸ் வீட்டில் சோதனை நடத்தினர். பிறகு, வீட்டு வேலைக்கு வந்த பத்மினியிடமும் விசாரணை நடத்தினர். அதில், அவர் அளித்த பதில்கள் காவல் துறையினருக்கு பல சந்தேகங்களை எழுப்பியது.
இதையடுத்து, வீடு முழுவதும் ஒவ்வொரு அறையாக காவல் துறையினர் சோதனை நடத்தியபோது, குளியல் அறையில் 6 பவுன் தங்க நகைகள் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த நகையை காவல் துறையினர் மீட்டனர்.
இதைத்தொடர்ந்து, பத்மினியிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியபோது, தங்க நகைக்கு ஆசைப்பட்டு வீட்டில் இருந்த நகையை திருடி, அதை குளியல் அறையில் மறைத்து வைத்து நகை திருடு போனதாக நாடகம் ஆடியதாக பத்மினி ஒப்புக்கொண்டார். இதையடுத்து, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பத்மினியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.