ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அருகே வாடகை கட்டிடத்தில் இயங்கிவரும் அரசு டாஸ்மாக் மதுபானக் கடையை காலி செய்ய வலியுறுத்தி கடை உரிமையாளரான பெண் நேற்று கடைக்கு பூட்டு போட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பார்ச் சம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர், அதே பகுதியில் தனக்கு சொந்தமான கடைகளை வாடகைக்கு விட்டுள்ளார். அதில், ஒரு கடையில் அரசு டாஸ்மாக் மதுபானக்கடை கடந்த 2016-ம் ஆண்டு முதல் ஒப்பந்த அடிப்படையில் இயங்கி வருகிறது.
இந்நிலையில், 2022-ம் ஆண்டு ஆறுமுகம் உயிரிழந்தார். இதையடுத்து, ஆறுமுகத்தின் மனைவி பாரதியின் பராமரிப்பின் கீழ் கடைகள் கொண்டு வரப் பட்டன. இதைத்தொடர்ந்து, அங்கிருந்த டாஸ்மாக் மதுபானக் கடையால், மற்ற கடைகளுக்கு யாரும் வாடகைக்கு வருவதில்லை என்பதால் டாஸ்மாக் கடையை காலி செய்ய வேண்டும் என அவர் கூறி வந்தார்.
அரசு டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கடந்த 6 மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக் அதிகாரியிடம் அவர் மனு வழங்கினார். ஆனால், இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் டாஸ்மாக் நிர்வாகம் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று காலை 11.30 மணியளவில் பூட்டிய நிலையில் இருந்த டாஸ்மாக் கடைக்கு பாரதி மேலும் ஒரு பூட்டு போட்டு கடையை மூடினார். இது தெரியாமல் வழக்கம் போல் பகல் 12 மணிக்கு கடையை திறக்க டாஸ்மாக் ஊழியர்கள் வந்தனர். அப்போது, டாஸ்மாக் கடைக்கு மேலும் ஒரு பூட்டு போட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை காவல் துறை யினர் மற்றும் டாஸ்மாக் அதிகாரி கள் அங்கு சென்று கடையின் உரிமையாளர் பாரதியிடம் பேச்சு வார்த்தை நடத்தி, இம்மாத இறுதிக்குள் வேறு இடத்துக்கு அரசு டாஸ்மாக் மதுபானக்கடையை மாற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில், டாஸ்மாக் கடையை பாரதி திறந்து விட்டார். அதன் பிறகு டாஸ்மாக் கடையில் விற்பனை தொடங்கியது.