20 ஆண்டுகளாக சென்னையை கலக்கிய பிரபல ரவுடி பட்டினம்பாக்கம் கடற்கரை அருகே பொதுமக்கள் மத்தியில் ஓடஓட வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புளியந்தோப்பு நரசிம்ம நகரை சேர்ந்த பிரபல ரவுடி சுரேஷ் என்ற ஆற்காடு சுரேஷ் (44). இவர் மீது ரவுடி ராதாகிருஷ்ணன், சின்னா மற்றும் வழக்கறிஞர் பகத்சிங் கொலை வழக்கு உட்பட 6 கொலை வழக்கு, கொலை முயற்சி, வழிபறி, ஆட்கடத்தல் என 30 க்கும் மேற்ப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. ரவுடி சுரேஷ் வழக்கு தொடர்பாக இன்று தனது வழக்கறிஞருடன் எழும்பூர் நீதிமன்றத்திற்கு சென்று விட்டு மாலை தனது நண்பர் மாதவன் உடன் பட்டினம்பாக்கத்தில் உள்ள மீனவ உணவகத்திற்கு சாப்பிட வந்தார்.
அங்கு மணற்பரப்பில் அமர்ந்து ரவுடி சுரேஷ் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது அங்கு காரில் வந்த அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று அரிவாளால் ஆற்காடு சுரேஷை சரமாரியாக வெட்டியது. இதனை தடுக்க வந்த மாதவனையும் அந்த கும்பல் வெட்டிவிட்டு காரில் தப்பிச்சென்றது.
இதில் படுகாயமடைந்த ஆற்காடு சுரேஷை அருகிலிருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய மாதவனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக பட்டினப்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷ் நுங்கம்பாக்கத்தில் உள்ள சிவில் சப்ளை கம்பெனியில் கிளார்க்காக பணியாற்றி வந்ததும், பின்னர் ரேஷன் பொருட்களை கடத்தி விற்பனை செய்தது தெரியவந்தது. அப்போது கடத்தல் கும்பலுக்கும், ஆற்காடு சுரேஷுக்கும் ஏற்பட்ட தகராறில் முதல்முறையாக புழல் சிறைக்கு சென்றுள்ளார்.
புழல் சிறையில் இருந்த போது ரவுடி சின்னா என்ற சின்னாகேசவலு என்பவருடன் கூட்டு சேர்ந்து கொலை, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஆற்காடு சுரேஷ் ஈடுபட்டு வந்துள்ளார். பின்னர் ஆற்காடு சுரேஷ், பெண் தாதா அஞ்சலையுடன் சேர்ந்து கஞ்சா விற்பனை, அடிதடி போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்த நிலையில் சின்னாவுடன் மோதல் ஏற்பட்டு கடைசியில் கடந்த 2009ம் ஆண்டு ஆற்காடு சுரேஷ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பூந்தமல்லி நீதிமன்ற வாசலில் வைத்து சின்னா மற்றும் அவரது வழக்கறிஞர் பகத்சிங்கை கொலை செய்து பெரிய தாதாவாக உருவெடுத்தார்.
இந்த நிலையில் கடந்த 2017ம் ஆண்டு ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் புன்னை பாலு, ரவுடி பாம் சரவணனின் தம்பி தென்னரசுவை கொலை செய்ததால், பாம் சரவணனுக்கும் ,ஆற்காடு சுரெஷுக்கும் பகை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே இறந்த சின்னகேவலுவின் கூட்டாளியான ராதா என்பவரை கடந்த 2019ம் ஆண்டு ஆற்காடு சுரேஷ் கொலை செய்துவிட்டு சிறைக்கு சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
15 முறை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்ட ஆற்காடு சுரேஷ், போலீஸாரின் தொடர் நெருக்கடி காரணமாக புளியந்தோப்பு பகுதியில் இருந்து வெளியேறி கடந்த 10 ஆண்டுகளாக ஆந்திரா மாநிலம், திருவள்ளூர் மாவட்டத்தில் பதுங்கி இருந்து தனது ஆட்களை வைத்து சென்னையில் மிரட்டல், கட்டப்பஞ்சாய்த்து உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் தென்சென்னை பகுதியில் பிரச்சனை உள்ள நிலங்களை விற்று தருவது போன்ற வேலைகளிலும் ஆற்காடு சுரேஷ் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது.