கிருஷ்ணகிரி : போதையில் நண்பனை கொன்று எரித்த வட மாநில இளைஞர்கள்!


கொலைச் செய்யப்பட்ட தீபக்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மது அருந்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக வட மாநில இளைஞரை எரித்துக் கொன்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் தொழிற்பேட்டை அருகே கர்நாடக மாநில எல்லை பகுதியான பள்ளூரில் உள்ள தைலமர தோப்பில் பாதி எரிந்த நிலையில் ஒரு வாலிபரின் உடல் கிடப்பதாக அத்திப்பள்ளி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெங்களூரு ரூரல் போலீஸ் சூப்பிரண்டு மல்லிகார்ஜூனா பாலதாண்டி சம்பவ இடத்துக்கு சென்று உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதைத்தொடர்ந்து அத்திப்பள்ளி போலீஸார் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆனேக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்து கிடந்தவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தீபக் ஹரிஜன் (வயது 25) என்பதும், அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது.

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீபக் ஹரிஜன் மற்றும் அவருடைய நண்பர்களான வடமாநிலத்தை சேர்ந்த 3 பேர் பள்ளூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒன்றாக மது குடித்துள்ளனர். அப்போது போதை தலைக்கேறியதும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இது கைகலப்பாக மாறியதில் 3 பேர் சேர்ந்து தீபக் ஹரிஜனை அடித்துக் கொலை செய்தனர். பின்னர் உடலை பள்ளூரில் உள்ள தைல மர தோப்புக்கு கொண்டு சென்று அங்கு தீ வைத்து எரித்து விட்டு சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தலைமறைவான 3 வடமாநில வாலிபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

x