கடையநல்லூர் காளியம்மன் கோயிலின் அருகில் உள்ள கங்கை அம்மன் கழுத்தில் போடப்பட்டிருந்த தாலியை பெண் ஒருவர் திருடி சென்ற சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மாவடிக்கால் பகுதியில் பிரபலமான காளியம்மன் கோவில் உள்ளது. இதன் அருகில் கங்கை அம்மன் கோவில் உள்ளது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக பூசாரி தினமும் கோயில் நடை திறந்து வைப்பது வழக்கம்.
நேற்று காலை சங்கரன்கோவிலில் இருந்து தனியார் பஸ்ஸில் வந்த மர்ம பெண் ஒருவர் மாவடிகால் பகுதியில் இறங்கி வந்துள்ளார். அதன் பின்னர் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென கோவில் கருவறைக்குள் நுழைந்த அந்த பெண், அம்மன் கழுத்தில் கிடந்த மாங்கல்யத்தை திருடியுள்ளார். இதன் பின்னர் அதே போன்று அருகில் உள்ள மற்றொரு கோயிலிலும் அம்மனின் கழுத்தில் இருந்த மாங்கல்யத்தைத் திருடி சென்றுள்ளார்.
இதன் பின்னர் அம்மனுக்கு பூஜை செய்ய வந்த பூசாரி, அம்மனின் கழுத்தில் இருந்த மாங்கல்யத்தை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். இந்த துணிகர திருட்டு தொடர்பாக, ஊர் நாட்டாமை செல்வகுமார் கடையநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் கடையநல்லூர் போலீஸார் அம்மனின் கழுத்தில் இருந்த மாங்கல்யத்தை திருடிய மர்மப் பெண்ணை கோவிலில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து தேடி வருகின்றனர். சுமார் 60 ஆயிரம் மதிப்புடைய அம்மனின் திருமாங்கல்யம் திருடப்பட்ட சம்பம் அப்பகுதி பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.