ஓசூர்: தளி அருகே அங்கன்வாடி மையம் அருகே சாலை விபத்தில் சிக்கி குழந்தை உயிரிழந்தார். இதையடுத்து, அங்கன்வாடி ஊழியர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டார்.
தளி அருகே வாணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மது. இவரது மகள் சசிகலா (3). இவர் அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அங்கான்வாடியில் இருந்த சசிகலா அப்பகுதியில் உள்ள சாலையைக் கடக்க முயன்றபோது, அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் மோதியதில் சிறுமி படுகாயமடைந்தார்.
அங்கிருந்தவர்கள் சிறுமியை மீட்டு ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுதொடர்பாக தளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஓட்டுநர் முனிகிருஷ்ணன் என்வரைக் கைது செய்தனர்.
இந்நிலையில், சிறுமி விபத்தில் சிக்கியதற்கு அங்கன்வாடி கண்காணிப்பாளர் பரிமளம் மற்றும் பணியாளர் வரலட்சுமி ஆகியோர் கவனக் குறைவே காரணம் எனக் கூறி இருவரையும் பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் கே.எம்.சரயு உத்தரவிட்டிருந்தார்.
இதனிடையே, அங்கன்வாடி ஊழியர்களை நிரந்த பணி நீக்கம் செய்யக் கோரி, குழந்தை சசிகலாவின் பெற்றோர் மது-ஆஷா மற்றும் உறவினர்கள் ஓசூர் உதவி ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர்.
தர்ணாவில் ஈடுபட்டவர் களிடம் உதவி ஆட்சியர் பிரியங்கா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அங்கன்வாடியில் கழிவறை கட்ட வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களை நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும். உயிரிழந்த குழந்தையின் தாயா ருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என கோரி்கை விடுத்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உதவி ஆட்சியர் உறுதியளித்தார். இதையடுத்து, தர்ணாவை கைவிட்டு கலைந்து சென்றனர்.