மும்பை: தானே மாவட்டத்தில் உள்ள கல்யாணைச் சேர்ந்த 30 வயதுடைய பசு காவலர் ஒருவரை, இரண்டு பேர் கடத்திச் சென்று கொடூரமாக தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்யாண் பகுதியை சேர்ந்த பசு காவலரை, நேற்று இரண்டு நபர்கள் அவரது காரில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கி, ஆட்டோ ரிக்ஷாவில் ஏற்றி, கோவிந்த் வாடி பைபாஸ் சாலையில் உள்ள ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு காலை 9.30 மணியளவில் அவரை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
தாங்கள் மாட்டிறைச்சி கொண்டு செல்லும் டிரக் பற்றி காவல்துறைக்கு தகவல் கொடுத்ததால் தாக்குவதாக பசுகாவலரிடம் அவர்கள் கூறியுள்ளனர். மேலும், தங்கள் வாகனம் பறிமுதல் செய்யப்பட அவரே காரணம் என்றும் தாக்கும்போது கூறியுள்ளனர். தாக்குதலுக்குப் பிறகு அந்த பசு காவலர், மற்றொரு வாகனத்திற்கு மாற்றப்பட்டு, பாட்ரிபூல் பகுதியில் உள்ள பூ மார்க்கெட் அருகே இறக்கிவிடப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் பேரில், பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், தாக்குதலை நடத்தியவர்கள் அஸ்லம் முல்லா மற்றும் அவரது சகோதரர் சாம் என அடையாளம் கண்டுள்ள போலீஸார், அவர்களைக் கைது செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.