திருமணம் செய்து கொள்வதாக கூறி நண்பனை பெண்ணாக மாற்றி மோசடி செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் விஜயவாடா நகரில் உள்ள கிருஷ்ண லங்கா பகுதியை சேர்ந்தவர் நாகேஸ்வரராவ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பவன் என்ற நபருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறியுள்ளனர். ஒன்றாக சாப்பிடுவது, ஒன்றாக வெளியே செல்வது என இவர்களது நெருக்கம் மேலும்அதிகரித்துள்ளது. இந்த நட்பு இருவருக்குமிடையே தன்பாலின ஈர்ப்பை ஏற்படுத்தியதாக தெரிகிறது.
ஒரு கட்டத்தில் நாகேஸ்வர ராவும் அவரது நண்பர் பவனும் காதலிக்க தொடங்கியுள்ளனர். சில காலம் சென்ற நிலையில் இருவரும் ஒன்றாக வீடு எடுத்து லிவிங் டு கெதர் முறையில் சேர்ந்து வாழ தொடங்கியுள்ளனர். பவன் தன்னிடம் இருந்த பணம் மற்றும் நகைகளை நாகேஸ்வர் ராவிடம் கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து அறிந்த அவர்களது நண்பர்களும், அக்கம் பக்கத்தினரும் இருவரது போக்கையும் கடுமையாக கண்டித்துள்ளனர். ஆனால், இருவரும் அதனை காது கொடுத்து கேட்கவில்லை. இந்நிலையில், இருவரும் ஒரு விபரீதமான முடிவை எடுத்துள்ளனர். இருவரும் வெவ்வேறு பெண்களை திருமணம் செய்து கொண்டால் தனித்தனியாக பிரியும் சூழல் எற்படும் என கருதியுள்ளனர்.
வாழ்நாள் முழுவதும் பிரியாமல் இருக்க அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழலாம் என நாகேஸ்வரராவ் ஆசை வார்த்தை கூறியதாக தெரிகிறது. அதன்படி, இருவரில் ஒருவர் பெண்ணாக மாற வேண்டும் என்ற நிலையில், பவன் அதற்கு ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து பவன் அறுவை சிகிச்சை செய்து கொண்டு தன்னை பெண்ணாக மாற்றிக் கொண்டார். பின்னர் நாகேஸ்வரராவிடம் வந்து இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார். ஆனால், நீ அழகாக இல்லை. அதனால் உன்னை திருமணம் செய்ய முடியாது என நாகேஸ்வர ராவ் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பவன், பெண்ணாக மாறினால் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக கிருஷ்ண லங்கா காவல் நிலையத்தில் புகார் செய்தார். தன்னிடம் இருந்த நகை மற்று பணத்தை பறித்துக் கொண்டு ஏமாற்றி விட்டதாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், நாகேஸ்வர ராவ் மற்றும் அவரது தாயார் விஜயலட்சுமி மீது மோசடி, துரோகம் செய்வது மற்றும் திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து, நாகேஸ்வர் ராவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.