மத்தியப் பிரதேசம்: இந்தூர் மாவட்டத்தில் நேற்று சுற்றுலா சென்றபோது, இரண்டு இராணுவ அதிகாரிகள் தாக்கப்பட்டனர். மேலும், அவர்களது இரண்டு பெண் தோழிகளில் ஒருவர் ஆயுதமேந்திய மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
இந்தூர் மாவட்டத்தின் மோவ் கன்டோன்மென்ட்டில் உள்ள ராணுவப் போர் பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்று வந்த இரண்டு மேஜர் ரேங்க் அதிகாரிகள், ஜாம் கேட் பகுதியில் தங்களது பெண் தோழிகளுடன் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது ஆயுதமேந்திய ஒரு கும்பல் அவர்களது காரை சுற்றி வளைத்தனர். அந்த கும்பலில் எட்டு முதல் பத்து பேர் வரை, கைத்துப்பாக்கிகள், கத்திகள் மற்றும் தடிகள் உள்ளிட்ட ஆயுதங்களை ஏந்தியபடி இருந்தனர். அவர்கள் இரு ராணுவ அதிகாரிகளையும், அவர்களது தோழிகளையும் தாக்கியுள்ளனர். மேலும், அவர்களது பர்ஸ் மற்றும் விலைமதிப்புமிக்க பொருட்களையும் கொள்ளையடித்தனர்.
பின்னர் ஒரு அதிகாரியையும், அவரின் தோழியையும் பணயக் கைதிகளாக வைத்திருந்த அந்த கும்பல், மற்றொரு அதிகாரி மற்றும் அவரின் தோழியை அனுப்பி ரூ.10 லட்சம் கொண்டுவந்தால் இவர்களை விடுவிப்பதாக கூறினர். இந்த சூழலில் பணயக் கைதியாக வைத்திருந்த பெண்ணை அவர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
விடுவிக்கப்பட்ட அதிகாரி, இந்த சம்பவம் குறித்து தனது உயர் அதிகாரிக்கு தகவல் கொடுத்தார். அதன் பிறகு போலீஸார் உஷார்படுத்தப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்தனர். இதனையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடினர். பின்னர் இவர்கள் நான்கு பேரும் மருத்துவப் பரிசோதனைக்காக சிவில் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டனர். மருத்துவர்களின் கூற்றுப்படி, அதிகாரிகளின் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளதும், பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும் மருத்துவ அறிக்கையில் உறுதியானது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, கொள்ளை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை மற்றும் ஆயுதச் சட்டம் தொடர்பான பாரதிய நீதி சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இரண்டு குற்றவாளிகள் இந்தூர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். மீதமுள்ள குற்றவாளிகளை கைது செய்ய 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.