சென்னை | மகாராஷ்டிரா இளைஞர் தற்கொலை விவகாரம்: நகை பட்டறை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது


சென்னை: மகாராஷ்டிரா மாநில இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக நகைப்பட்டறை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம், சங்கிலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சயிப் அலிரபிக் காஸி என்ற காஸி(30). இவர்சென்னை, யானைக்கவுனி, அனுமந்தராயன் கோயில் தெருவில் உள்ள தங்கநகைப் பட்டறையில் தங்கி, தங்க நகைகள் உருக்கும் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 9-ம் தேதி இரவு, நகை பட்டறையின் 3-வது மாடியிலுள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

யானைக்கவுனி போலீஸார் சம்பவ இடம் விரைந்து காஸி உடலை மீட்டுபிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் கட்டமாக இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அதேநேரம், காஸி உடலில் இருந்தகாயங்கள், சிசிடிவி பதிவுகள், மற்றும் பட்டறை உரிமையாளர், வேலையாட்கள் ஆகியோரிடமும் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதில், இறந்துபோன காஸி, தங்கக்கட்டிகளை உருக்கும்போது தங்கத்தைத் திருடி, செம்பு கலந்து ஏமாற்றி வந்ததும், இதனையறிந்த பட்டறை உரிமையாளர் சுமித் பாலாஜி பாபர் மற்றும் அங்கு வேலை செய்து வந்த 3பேர் சேர்ந்து காஸியை கட்டையால் தாக்கியுள்ளனர். மேலும், திருடிய தங்கத்தை கேட்டு அறையில் அடைத்து வைத்து பூட்டியதும், இதனால் மனமுடைந்த காஸி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது.

இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக சம்பந்தப்பட்ட நகைப் பட்டறை உரிமையாளர் சுமித் பாலாஜி பாபர் (29), அங்கு வேலை செய்து வந்தசவுகார்பேட்டை வைபவ் அபாசாகிப் குருவ் (29), அதே பகுதி ராகேஷ் சூர்யகண்ட் மாலி (29), மனோஜ்மாணிக் சூர்யாவன்ஷி (31) ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

x