பணம் தர மறுத்ததால் திருமணமான தனது முன்னால் காதலியை இளைஞர் ஒருவர் கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ள சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சித்துராஜபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் சுசீந்திரன். இவரது மனைவி ஷீலாராணி . இவர்களுக்கு 10 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. ஷீலா ராணி ஒப்பனைக் கலைஞராக பணிபுரிந்து வந்தார்.
இவருக்கும் சிவகாசி மேற்கு ரிசர்வ் லைன் பகுதியில் வசித்து வரும் ஷேக் முகமதுயாசின் என்பவருக்கும் 10 வருடங்களாக பழக்கம் இருந்து வந்திருக்கிறது.
முன்பு ஷீலாராணியும், சேக் முகமதுயாசினும் சிவகாசியில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் ஒன்றாக பணிபுரிந்த போது ஏற்பட்ட பழக்கம் ஷீலாராணிக்கு திருமணம் ஆன பின்னரும் தொடர்ந்து வந்திருக்கிறது.
இந்நிலையில் கடந்த 4 ம் தேதியன்று ராதாகிருஷ்ணன் காலனி பகுதியில் ஒப்பனைப் பணிக்காக செல்வதாக கூறிவிட்டு சென்ற ஷீலாராணி அன்று இரவு வரை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் சுசீந்திரன், தனது மனைவியை காணவில்லை என காவல் நிலையத்தில் 5ம் தேதி புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணையைத் தொடர்ந்தனர்.
ஷீலாராணியின் செல்போன் தொடர்புகளை ஆராய்ந்த போலீஸார், அவர் அடிக்கடி ஷேக் முகமது யாசினுடன் பேசி வந்ததை கண்டறிந்தனர் அவர் காணாமல் போன நாளன்று அவருடன் பலமுறை செல்போனில் பேசியதும் தெரிய வந்தது. அதையடுத்து அவரை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் ஷேக்முமது யாசின், ஷீலாராணியிடம் பழக்கம் இருந்ததையும், அவரை நகைக்காக கொலை செய்ததையும் ஒப்புக் கொண்டார்.
ஷீலாராணியை செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு பேசி அவரை ஒரு காரில் ஏற்றிக் கொண்டு திருத்தங்கலிலிருந்து விருதுநகர் செல்லும் சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு வைத்து பணம் கேட்டபோது தன்னிடம் பணம் இல்லை என்று ஷீலாராணி கூறியுள்ளார். அதனால் அவர் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 3 பவுன் மதிப்புள்ள தங்கச் செயினை கேட்டுள்ளார். ஷீலாராணி தர மறுத்ததால் செயினை பறித்துக் கொண்டு அவரை கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்துள்ளார்.
அவரின் இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இளைஞர் ஷேக்முகமது யாசின் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.