திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மதுபோதையில் மருத்துவர் சிகிச்சை அளித்ததாக புகார்


திருவள்ளூர்: திருவள்ளூர் ஜெ.என்.சாலையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. சுமார்500 படுக்கைகளுடன் அவசர சிகிச்சைபிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள், அதிநவீன மருத்துவ உபகரணங்களுடன் இந்த மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த பொது மருத்துவர் நல்லதம்பி என்பவர், மதுபோதையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, கேள்வி எழுப்பிய நோயாளிகள், நோயாளிகளின் உதவியாளர்களை பொது மருத்துவர் நல்லதம்பி தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

பிறகு, சக மருத்துவர்கள் மற்றும்ஊழியர்கள், மருத்துவர் நல்லதம்பியை அவசர சிகிச்சை பிரிவில் இருந்து வெளியே அழைத்து சென்றதோடு, நோயாளிகள் மற்றும் உதவியாளர்களை சமாதானப்படுத்தினர். இதுதொடர்பான காணொலி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

மேலும், மருத்துவர் நல்லதம்பி ஏற்கெனவே திருவண்ணாமலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். தற்போது நல்லதம்பியின் மனைவி மேற்படிப்புக்காக ஆந்திர மாநிலம் - திருப்பதி சென்றுள்ளார். இதனால், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாறுதல் பெற்று வந்து 40 நாட்களே ஆனநிலையில், மருத்துவர் நல்லதம்பி மீது மதுபோதையில் சிகிச்சை அளித்ததாக புகார் எழுந்துள்ளது.

இந்த புகார் தொடர்பாக மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி கூறும்போது, “மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவர் நல்லதம்பி, மது போதையில் சிகிச்சை அளித்ததாக எழுந்துள்ள புகார்தொடர்பாக விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவினர் விசாரணை முடிந்த பிறகு அளிக்கும் அறிக்கை மருத்துவக் கல்வி இயக்குநர், ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் அடிப்படையில், மருத்துவக் கல்வி இயக்குநர் உரிய நடவடிக்கை எடுப்பார்’’ என்றார்.

x