தகாத உறவு வெளியே தெரிந்ததால், லாரி டிரைவரை தனது தங்கை மகனுடன் சேர்ந்து இளம்பெண் ஒருவர் கல்லால் அடித்துக் கொன்ற சம்பவம் கிருஷ்ணகிரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த கொலதாசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி (39). 10 ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் கேசவமூர்த்தி என்பவர் இறந்து விட்டார். இதனால் ஜோதி அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இதே போல் மகாதேவபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ்(40). லாரி டிரைவரான இவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் வெங்கடேஷ் தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், வெங்கடேஷனுக்கும், ஜோதிக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. கடந்த 5 வருடமாக பழக்கம் இருந்த வந்த நிலையில் இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். இதனிடையே, வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு வெங்கடேஷ் வழக்கம் போல் ஜோதி வீட்டுக்கு வந்துள்ளார். வெங்கடேஷ் சென்ற சிறிது நேரத்தில் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது வெங்கடேஷ் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அவரை மீட்ட அப்பகுதி மக்கள், சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேஷ் உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அதிர்ச்சி தகவல் வெளியானது. ஜோதிக்கும் வெங்கடேஷுக்கும் இடையில் கடந்த 5 வருடமாக பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சமீபகாலமாக வெங்கடேஷிடம் பேசுவதை ஜோதி குறைத்து வந்துள்ளார். இதனிடையே, ஜோதியின் தங்கை மகன் ஹரீஷுக்கு இவர்களின் முறையற்ற உறவு தெரிய வந்ததையடுத்து கண்டித்துள்ளார். இனிமேல் வீட்டுக்கு வரவேண்டாம் என வெங்கடேஷிடம் ஜோதி கூறியுள்ளார்.
இந்நிலையில் வெங்கடேஷ் மீண்டும் ஜோதி வீட்டுக்கு சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஹரீஷ், வெங்கடேஷுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஜோதி மற்றும் ஹரீஷ் இருவரும் சேர்ந்து வெங்கடேஷை கற்கள் மற்றும் கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளனர். வெங்கடேஷின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்துள்ளனர். ஆட்கள் வருவதை கண்டு இருவரும் அங்கிருந்து தலைமறைவாகி விட்டது தெரிய வந்தது. இந்நிலையில், ஜோதி, அவரது தங்கை மகன் ஹரிஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.