பெரியகுளம்: பெரியகுளம் அழகர்சாமிபுரத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கண்ணதாசன் (எ) முட்டகண்ணன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். அவரைக் கொலை செய்தது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை திருவள்ளுவர் நகர் கல்லாறு ரோடு அழகர்சாமிபுரம் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகன் கண்ணதாசன் என்ற முட்ட கண்ணன் (31). சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் மற்றும் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். அரிவாள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு பொதுமக்கள் மற்றும் சாலைகளில் சென்று வருவோரை அச்சுறுத்தி வருவதை வழக்கமாகக் கொண்டு ரவுடி போல் வலம் வந்துள்ளார்.
கண்ணன் பலமுறை சிறை சென்று வருவதோடு தொடர்ந்து பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார் . இவர் மீது கஞ்சா, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
இந்தநிலையில் அதே பகுதியைச் சேர்ந்த அண்ணன் தம்பியான கரண் குமார் (25), புகழேந்தி (24) ஆகிய இருவரையும் கண்ணதாசன் என்ற முட்ட கண்ணன் மதுபோதையில் வீண் வம்பிழுத்து தாக்கியுள்ளார். இதனால் கரண் குமார், புகழேந்தி இருவரும் சேர்ந்து அவர்களது நண்பர்களான அழகர்சாமிபுரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அழகர் (22), மதுரை சோழவந்தான் முள்ளி பள்ளம் பகுதியைச் சேர்ந்த இளங்கேஸ்வரன் (28), சார்லி (23) உள்ளிட்ட ஐந்து நபர்களும் ஒன்று சேர்ந்து நேற்று இரவு கண்ணதாசன் என்ற முட்ட கண்ணன் என்பவரை கத்தியால் குத்தி கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர் .
இதனைப் பார்த்த அக்கம் பக்கம் இருந்தவர்களின்அலறல் சத்தம் கேட்டு குற்றச்செயல்களில் ஈடுபட்ட ஐந்து பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதனைத் தொடர்ந்து பெரியகுளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பெரியகுளம் காவல்துறையினர், பலத்த காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கண்ணதாசன் (எ) முட்ட கண்ணனை மீட்டு பெரியகுளம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கண்ணதாசன் என்ற முட்ட கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கண்ணதாசன் என்ற முட்ட கண்ணனை கொலை செய்த பேரையும் பெரியகுளம் காவல்துறையினர் கைது செய்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள புகழேந்தி, கரண்குமார் ஆகிய இருவர் மீதும் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனிடையே கடந்த சில நாட்களாக பெரியகுளம், வடுகபட்டி ஆகிய பகுதிகளில் தொடர் கொலைகள் அரங்கேறி வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.