மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநில வாலிபரை கை,கால், கழுத்தைக் கயிற்றால் கட்டி ரயிலில் அழைத்து சென்ற போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக அவரது உறவினரை கைது செய்து போலீஸார் விசாரணை. செய்து வருகின்றனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ்(25). இவர் உட்பட 10 பேர் கல்குவாரியில் பணியாற்றுவதற்காக கடந்த 15-ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு மாவட்டத்திற்கு வந்துள்ளனர். அப்போது அங்கு பிரகாஷூக்கு திடீரென மனநலம் பாதிக்கப்பட்டு, உடன் பணியாற்றும் சக தொழிலாளர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். உடனே சக ஊழியர்கள் இதுகுறித்து பிரகாஷின் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர். அவர்கள் பிரகாஷை சொந்த ஊருக்கு அழைத்து வருமாறு கூறினர்.
இதனால் பிரகாஷை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க குவாரியில் பணியாற்றும் சக தொழிலாளர்கள் முடிவு செய்தனர். இதற்காக பிரகாஷின் உறவினர் ராம்குமார் மற்றும் 15 வயது சிறுவனுடன் சத்தீஸ்கர் செல்வதற்காக ரப்தி சாகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லாத பெட்டியில் நேற்று அனுப்பி வைத்தனர்.
அப்போது ரயிலில் திடீரென பிரகாஷ் பயங்கரமாக கூச்சலிட்டு பயணிகளுக்குத் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் ராம்குமார் மற்றும் சிறுவன் இருவரும் சேர்ந்து பிரகாஷின் கை, கால்களைக் கயிற்றால் கட்டி அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போதும் பிரகாஷ் தொடர்ந்து கூச்சலிட்டு வந்ததால், வேறு வழியின்றி பிரகாஷின் கழுத்தையும் துணியால் கட்டி இருக்கையின் கீழ் படுக்க வைத்துள்ளனர். இந்நிலையில் சீட்டின் அடியில் காற்றோட்டம் இல்லாததாலும், கழுத்து நெறிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டு பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் மூச்சுப் பேச்சு இல்லாமல் கிடப்பதைப் பார்த்த பயணிகள் உடனே ரயில்வே போலீஸாருக்கு இது குறித்து தகவல் அளித்தனர்.
இதன் பேரில் ரயில் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்ததும் ரயில்வே போலீஸார் உயிரிழந்த பிரகாஷின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து ராம்குமார்(35) மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.