மதுரை: நியோமேக்ஸ் மோசடி வழக்கில் இடைத்தரகர்களாக செயல்பட்டவர்களை கைது செய்து அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நியோ மேக்ஸ் நிதி நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் கூடுதல் வட்டி மற்றும் மனையிடம் தருவதாக கூறி பல கோடி ரூபாய் வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் கரூர் லோகநாதன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், நியோமேக்ஸ் நிறுவனத்தில் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளோம். எங்களையும் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் சேர்த்து சாட்சிகளாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை நீதிபதி கே.முரளி சங்கர் விசாரித்தார். பின்னர் நீதிபதி, நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணையை துரிதப்படுத்த வேண்டும். இந்த வழக்கை விசாரித்து வரும் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் பல்வேறு மாவட்டங்களில் இடைத்தரகர்களாக செயல்பட்டவர்களையும் கைது செய்து, அவர்களின் சொத்துக்களையும் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.