படிக்கும் வயதில் காதல்... பாதியில் முடிந்த வாழ்க்கை... 10-ம் வகுப்பு மாணவி காதலனுடன் தற்கொலை!


உயிரிழந்த காதலர்கள்

மணப்பாறை அருகே பத்தாம் வகுப்பு படித்த மாணவி, தனது காதலனுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தானத்தம் அருகே உள்ள கருத்தக்கோடங்கிப்பட்டியை சேர்ந்தவர்கள் பொன்னுசாமி- சித்ரா தம்பதி. இவர்களின் மகள் ஸ்ரீநிதி (15) அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 6-ம் தேதி முதல் ஸ்ரீநிதியை காணவில்லை. வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். உறவினர் வீடுகளுக்கும் அலைபேசி மூலம் விசாரித்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

இதையடுத்து புத்தானத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் ஸ்ரீநிதியை தேடி வந்தனர். இந்நிலையில் அதே கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் ஒரு மரத்தில் மாணவியும், ஒரு வாலிபரும் நேற்று தூக்கில் பிணமாக தொங்கியபடி கிடந்தனர். இது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற போலீஸார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் இறந்தவர்கள் மாணவி ஸ்ரீநிதி மற்றும் அதே பகுதியை சேர்ந்த நைனான் என்ற அஜித்குமார் (19) என்பது தெரியவந்தது. இருவரும் தூக்கில் தொங்கிய மரத்திற்கு கிழே கிடந்த அஜித்குமாரின் செல்போனில் ஸ்ரீநிதியுடன் இருக்கும் படத்தை பதிவிட்டு அதில், `மிஸ் யூ ஆல்... போயிட்டு வரேன்' என்று ஸ்டேட்டஸ் வைக்கப் பட்டிருந்தது. இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட போட்டோவும் செல்போனில் இருந்தது.

ஸ்ரீநிதியின் கழுத்தில் தாலி இருந்த நிலையில் ஸ்ரீநிதியும், அஜித்குமாரும் காதலித்திருக்கலாம், காதலுக்கு எதிர்ப்பு எழுந்ததால் இருவரும் திருமணம் செய்து கொண்டு, தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்ள திட்டமிட்டு தூக்கில் தொங்கி இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x